பள்ளி கழிவறையில் 12-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை - கோவில்பட்டியில் அதிர்ச்சி
21 Sep,2022
கோவில்பட்டி அருகே பள்ளி கழிவறையில், 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை பகுதியில் இயங்கி வரும் தனியார் மேல்நிலைப்பள்ளியில் ராமநாதபுரத்தை சேர்ந்த மாணவி ஒருவர் விடுதியிலேயே தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு பள்ளி கழிவறையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்த இவரை கண்ட சக மாணவிகள் கண்ணீர் விட்டு கதறியுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில், உயிரிழந்த மாணவி கடந்த ஒருவாரத்திற்கு முன்பு தனது ஊரில் சித்தி ஒருவர் இறந்த துக்க நிகழ்விற்காக ஊருக்கு சென்று விட்டு திரும்பியதாகவும், அப்போது இருந்து யாரிடமும், சரிவர பேசமால் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் மாணவிக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், சக மாணவிகளிடம் பேசும் போடு மனமுடைந்து காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவியின் அறையில் இருந்து மீட்கப்பட்ட கடிதத்தில் ஸ்ரீராமஜெயம் என எழுதப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.