சென்னை மாநகராட்சியை மேலும் விரிவுபடுத்துவதற்கு முன்பாக இப்போதுள்ள நகர கட்டமைப்பிலேயே பல்வேறு குறைகள் நிலவுவதாகவும் தலைநகரில் வாழும் எளிய மக்களுக்கு பல அடிப்படை வசதிகள் தற்போதும் கூட முழுமையாக கிடைக்கவில்லை என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் மூன்றாவது சென்னை முழுமை திட்டத்தின்படி (3rd master plan), அரக்கோணம், அச்சரபாக்கம் போன்ற பகுதிகள் வரையிலும் சென்னை மாநகராட்சியை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் செப்டம்பர் 19ஆம் தேதி சென்னை பெருநகரத்திற்கான மூன்றாம் முழுமை திட்டம் (2027-2046) தொலைநோக்கு ஆவணம் தயாரித்தல் திட்டத்திற்கான தொடக்க கூட்டம் நடைபெற்றது. ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு. முத்துசாமி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர், திரு.வி.க நகர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் அதில் கலந்துகொண்டனர்.
அந்த கூட்டத்தின்போது, மூன்றாவது சென்னை முழுமை திட்டத்தின்படி, அரக்கோணம், அச்சரப்பாக்கம் போன்ற பகுதிகள் வரை சென்னை மாநகராட்சி விரிவுபடுத்த திட்டம் உள்ளதாகவும் அங்குள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் புறம்போக்கு நிலங்களில் மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் மூன்றாவது முழுமை திட்டத்தில், நகரில் ஆக்கிரமிப்புகளைத் தவிர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.
வளரும் நாடுகளில் உள்ள நகரங்கள் விரிவடைவது 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே வழக்கமான ஓர் அம்சமாக இருந்து வருகிறது. குறிப்பாக இந்தியா, சீனா போன்ற நாடுகளில் நகரமயமாக்கல் தீவிரமடைந்தது. நகரம் விரிவடைவதை உலகமயமாக்கலின் பார்வையில் பார்க்கும்போது ஒரு நாட்டின் ஓராண்டுக்கான தனிநபர் வருமான விகிதம் அதிகரிப்பதாக தெரிந்தாலும், அது வருமான சமத்துவமின்மையை அதிகரிப்பதாக குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் 2009ஆம் ஆண்டு வெளியிட்ட ஓர் ஆய்வு குறிப்பிட்டது.
நகரம் விரிவடைவதால் ஏற்படக்கூடிய நன்மைகள் மற்றும் சவால்கள் என்ன?
2016ஆம் ஆண்டு ஐஐடி கவுஹாத்தியின் சிவில் இன்ஜினியரிங் துறையைச் சேர்ந்த சீதாராம் ஜி தல்லக் மேற்கொண்ட ஓர் ஆய்வு, ஒரு நகரம் விரிவடையும்போது ஏற்படக்கூடிய சவால்களில் முதன்மையானதாக, குடிநீர், கழிவுநீர் சுத்திகரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, உணவுப் பாதுகாப்பு, பொதுப் போக்குவரத்து உட்பட, நகர்ப்புற உள்கட்டமைப்பில் பற்றாக்குறை ஏற்படுவதைக் குறிப்பிடுகிறது.
மேலும், இவையனைத்தும் குறைந்த வருமானம் கொண்ட நகர்ப்புற மக்கள் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
வாழ்வதற்கு ஆகும் செலவு, அதிகரிக்கும் நகர்ப்புற ஏழைகளின் எண்ணிக்கை, மோசமான சுகாதார நிலைமைகள் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத குடிசைகள், மிகவும் அடர்த்தியாக மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் ஆகியவை அதிகரிக்க வழிவகுக்கிறது.
சுற்றுச்சூழலில் எதிர்மறையான தாக்கள் ஏற்படும். நீர்நிலைகள், பொது இடங்கள், காற்றின் தரம், பசுமைப் பரப்பு ஆகியவை பாதிப்பதோடு, ஆற்றல் நுகர்வு அதிகரிக்கும்.
இப்படியாக, ஒரு நகரம் விரிவடைதில் பல சவால்கள் இருக்கும்
அந்த ஆய்வின்படி, ஒரு நகரம் விரிவடையும்போது, மக்கள் கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்வதால், தொழில் திறன் கொண்டவர்களின் எண்ணிக்கை நகரங்களில் அதிகரிக்கிறது. பொருளாதார வளர்ச்சி, வர்த்தகம் மற்றும் சுற்றுலா வளர்ச்சியை மாநகர் விரிவாக்கம் ஊக்குவிக்கிறது. நகர்ப்புறங்கள், முதலீடுகள், உயர்-தொழில்நுட்ப தொழில்கள் ஆகியவற்றின் மையங்களாகச் செயல்படுகின்றன.
சமூக ஒருங்கிணைப்புக்கான சூழலை வழங்குகிறது. இதன்மூலம், பல்வேறு பின்னணிகள், குழுக்கள், மதங்கள் மற்றும் பிரிவினர் ஒன்றிணைந்து வாழ்கின்றனர்.
சென்னை நகர விரிவாக்கம் யாருக்கானது? ஒரு நகரம் விரிவடைகிறது என்றால், அதில் எதையெல்லாம் கவனிக்க வேண்டும்?
சென்னை மாநகராட்சி இதுவரை இரண்டு முறை விரிவடைந்துள்ளது. 1975ஆம் ஆண்டுக்கு முன்பு 174 சதுர கி.மீட்டராக இருந்த சென்னை, 21ஆம் நூற்றாண்டில் 1,189 சதுர கி.மீட்டராக விரிவுபடுத்தப்பட்டது. சென்னைக்கான இரண்டாவது முழுமை திட்டத்தில், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகள் சென்னைக்குள் கொண்டுவரப்பட்டன.
2018ஆம் ஆண்டிலேயே, 1,189 சதுர கி.மீட்டராக இருந்த சென்னை மாநகராட்சியை 8,878 சதுர கி.மீட்டராக விரிவுபடுத்தும் திட்டம் குறித்த ஆலோசனைகள் நடந்தன. தற்போது மீண்டும் சென்னையை விரிவுபடுத்துவது குறித்து மூன்றாவது முழுமை திட்டத்திற்கான கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் விரிவுபடுத்துதல் எப்படியானதாக இருக்க வேண்டும் என்று நகரப்புற சமூக பொருளாதாரம் குறித்து ஆய்வு செய்து வரும், அமெரிக்காவின் மாசாசூஸெட்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொருளியல் ஆய்வாளர் எஸ்.கிஷோர்குமாரிடம் பேசியபோது, "இந்த விரிவுபடுத்தும் திட்டத்தின் நோக்கம் என்ன என்பது தான் முதல் கேள்வியாக இருக்க வேண்டும். நகரத்திற்குள் வாழ்ந்த மக்களை பெரும்பாக்கம், கண்ணகி நகர் ஆகிய மாநகராட்சிக்கு வெளியிலிருந்த பகுதிகளில் கொண்டு சென்று குடியமர்த்தினார்கள். அதற்குப் பிறகு, கண்ணகி நகர், எழில் நகர் ஆகிய பகுதிகள் இரண்டாவது மாஸ்டர் பிளான் திட்டத்தின்படி சென்னை விரிவாக்கப்பட்டபோது மாநகராட்சி எல்லைக்குள் வந்தன. ஆனால், பெரும்பாக்கம் இன்னமும் மாநகராட்சி எல்லைக்குள் வரவில்லை. இதில், கண்ணகி நகர், எழில் நகர் ஆகியவை சென்னை எல்லைக்குள் வந்திருந்தாலும் இன்னமும் அவற்றுக்கு அடிப்படை வசதிகள் முறையாகக் கிடைக்கவில்லை," என்றார்.
அதோடு, இப்படியான விரிவுபடுத்தலில் யார் பயனடைகிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டும். தகவல் தொழில்நுட்பம் போன்ற தொழில் துறைகள் தான் இதில் பயனடைகின்றன என்று கூறியவர், "ஒரு மாநகராட்சியை விரிவுபடுத்தும்போது, அதில் வாழும் எளிய உழைக்கும் மக்களுக்கு என்ன மாதிரியான நன்மைகள் கிடைக்க வேண்டும் என்பதைக் கவனிக்க வேண்டும். ஆனால், ஏற்கெனவே இங்கு போக்குவரத்து வசதியில் பற்றாக்குறை நிலவுகிறது.
ஏற்கெனவே சென்னைக்குள் இருக்கும் பல பகுதிகளுக்கே மெட்ரோ குடிநீர் வசதி கிடைக்கவில்லை. நகர எல்லையை விரிவுபடுத்துவதால் மட்டுமே அனைத்துப் பகுதிகளுக்கும் அந்த வசதி கிடைத்துவிடாது. ஒரு மாநகராட்சியின் எல்லையை விரிவுபடுத்துவதால், அதில் வாழும் உழைக்கும் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்பட்டுவிடாது. அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும் சேவைகளையும் தான் முதலில் விரிவுபடுத்த வேண்டும்," என்று கூறினார்.
மேற்கொண்டு பேசிய அவர், "கண்ணகி நகர், செம்மஞ்சேரி, எழில் நகர், பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் சுமார் 4 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்குப் போதுமான அளவு பேருந்து வசதி, அரசுப் பள்ளிகள், அரசு மருத்துவமனைகள் இல்லை. அந்தப் பகுதிகள் வெள்ள அபாயம் கொண்ட பகுதிகளாக உள்ளன. அதைச் சரி செய்யவில்லை.
சிவப்புக் கோடு
மான் வேட்டை, தொடரும் மரணங்கள் - யார் காரணம்? சென்னை ஐஐடியில் என்ன நடக்கிறது?
சுற்றுச்சூழல் தரவரிசையில் இந்தியாவுக்குக் கடைசி இடம்: அதிருப்தியில் இந்திய அரசு – காரணம் என்ன?
அதையெல்லாம் விட்டுவிட்டு, வெறுமனே சென்னை மாநகராட்சியின் எல்லைக் கோடுகளை மட்டும் அழித்துவிட்டுப் பெரிதாகப் போடுவது, தகவல் தொழில்நுட்பம் போன்ற தொழில் துறைகளுக்குத் தான் பலனளிக்குமே ஒழிய, எளிய உழைக்கும் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது.
அதுமட்டுமின்றி, மாநகராட்சியை விரிவுபடுத்துவதால், அந்தப் பகுதிகளிலும் தண்ணீர் வரி போன்ற வரிகள், வீட்டு மனையின் விலை, வீட்டு வாடகை என்று அனைத்தையும் அதிகப்படுத்தும். விலையேற்றம் எளிய மக்களின் வாழ்வியல் மீது மேலதிக அழுத்தத்தை ஏற்படுத்தும்.
குறைந்தபட்ச அடிப்படை வசதிகளைச் செய்துகொடுக்க வேண்டும். வெள்ள அபாயங்களைச் சரிசெய்ய வேண்டும். அதைத் தவிர்த்துவிட்டு, வெறுமனே எல்லைக் கோடுகளை மாற்றிப் போடுவதால் எந்தப் பயனும் எளிய மக்களுக்குக் கிடைக்காது," என்றார்.
இப்போது சென்னை மாநகராட்சியின் நகரக் கட்டமைப்பு எப்படியுள்ளது? தலைநகரில் வாழும் எளிய மக்களின் நிலை என்ன?
நகரம் விரிவடையும்போது போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படும். ஆனால், இருக்கும் நகர்ப்பகுதியிலேயே இவ்வசதிகள் சமமாகவும் சீராகவும் இல்லை என்ற பிரச்னை நிலவுகிறது என்கிறார் சென்னையைச் சேர்ந்த மானுடவியல் ஆய்வாளர் முனைவர் அ.பகத் சிங்.
மேற்கொண்டு பேசியவர், "1990களுக்குப் பிறகான சென்னையில் தகவல் தொழில்நுட்பத் துறையை பெரிய தொழில் வளர்ச்சி என்று கூறினார்கள். ஓ.எம்.ஆர் சாலை அசுர வளர்ச்சி கண்டது. ஆனால் 1960களிலேயே உரத் தொழிற்சாலை, கனரக வாகன உற்பத்தி, உதிரி பாகங்கள் தயாரிப்பு, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் என பொருளதார மையமாக இருந்தது வடசென்னையின் திருவொற்றியூர், எண்ணூர், மணலி, அம்பத்தூர் போன்ற பகுதிகள்தான். ஆனால், இன்று வரை உள்ளகட்டமைப்பு வசதிகள் வளர்ந்த பாடில்லை.
2000ஆவது ஆண்டுக்குப் பிறகு சென்னையோடு இணைந்த தென்சென்னை பகுதிகளுக்குக் கிடைத்துள்ள கட்டமைப்பு வசதிகள் கூட வடசென்னையின் புறநகரில் உள்ள பகுதிகளுகு்கு 2022 ஆகியும் கிடைக்கவில்லை. மெட்ரோ வந்த பிறகும் கூட சாலை கட்டமைப்பு வசதிகள், வடிகால் வசதிகள் இன்னமும் மேம்படவில்லை. இது ஏதோ வடசென்னை பகுதிகள் மீதான புறக்கணிப்பு அல்ல. தென்சென்னையிலும் அடித்தட்டு உழைக்கும் மக்கள் வசிக்கும் ஓ.எம்.ஆர். சாலைக்கு வெளியே உள்ள சென்னையின் மற்றொரு பகுதிக்கும் இதே நிலைதான். கண்ணகி நகரும், எழில் நகரும் நகர வளர்ச்சியின் கருப்பு பகுதிகள்.
ஏற்கெனவே இருக்கக்கூடிய நகரக் கட்டமைப்பில் வாழும் அடித்தட்டு மக்களுக்கு தலைநகரத்தில் இருக்கக்கூடிய அடிப்படை வசதிகள் சமமாகப் போய்ச் சேர்ந்துள்ளதா என்ற கேள்வி இன்னமும் நிலவுகிறது," என்று கூறுகிறார்.
மேலும், "இப்போதுள்ள சென்னை நகரக் கட்டமைப்பிலேயே பல பிரச்னைகள் உள்ளன. மழைக் காலத்தில் வெள்ளம், மரங்களின் அடர்த்தி குறைவால் வெயில் காலத்தின் அதீத வெப்பம், வாகனப் புகையால் உண்டாகும் மாசு என்று பல நெருக்கடிகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில்தான் நகரக் கட்டமைப்பு உள்ளது. இன்னொருபுறம், நகரத்திற்குள்ளிருந்து எளிய மக்களை வெளியேற்றுவதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இவற்றுக்கு மாற்றாக, ஒரே இடத்தை நோக்கி அனைத்து கட்டமைப்புகள், நிர்வாகம், பொருளாதாரம் அனைத்தையும் கொண்டுவரக் கூடாது என்பது தான் அதற்கு அடிப்படையான தீர்வாகச் சொல்லப்படுகிறது. அதன் அர்த்தமே, அளவுக்கு மீறிப் போனால் வீங்கி வெடித்துவிடும் என்பதுதான்.
அப்படியிருக்கும்போது ஒரே நகரத்தை மேன்மேலும் விரிவுபடுத்திக் கொண்டே போவது மக்களுடைய வாழ்வியல் ரீதியாகப் பார்க்கும்போது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்," என்கிறார்.
அதோடு, "சென்னை நகரப்புறம் வளரும்போது, அதிலுள்ள அடித்தட்டு மக்கள் வெளியேற்றப்படுவது இயல்பாக நடந்து வருகிறது. அதைப் போலவே, இணைக்கப்பட உள்ள கிராமப்புற பகுதிளில் வாழும் மக்களுக்கு என்ன மாற்று வழங்கப்படும், சென்னை மாநகர் விரிவடையும்போது ஏற்கெனவே இருக்கக்கூடிய விவசாயப் பகுதிகளுக்கு என்ன மாற்று வழங்கப்படும் போன்ற கேள்விகள் எழுகின்றன.
விவசாய நிலங்களின் உரிமையாளர்களுக்கு பொருளாதார மாற்று வழங்கிவிடலாம். ஆனால், அந்த நிலங்களில் பணியாற்றக் கூடிய நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு என்ன மாற்றை இ்ந்த நகர்ப்புற விரிவாக்கம் தரப்போகிறது என்ற கேள்வியும் முதன்மையானது" என்றவர், "இதுவரையிலான தொழில் வளர்ச்சியோ, நகர விரிவாக்கமோ அதன் முதல்படியாக இருக்கப்போவது ரியல் எஸ்டேட் புரோக்கரேஜ்தான். எளிய மக்களிடம் இருந்து நிலம் பறிக்கப்படப் போவதையும் அவர்களை நகரங்களை நோக்கிய அகதிகளாக்கும் மாற்றங்களையும் சமாளிக்கப் புதிய திட்டங்கள் அரசிடம் உள்ளதா?" என்று கேள்வி எழுப்பினார்.