சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கிய மதுரை உயர் நீதிமன்றக் கிளை
15 Sep,2022
மதுரை: ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என Youtube சேனலில் தெரிவித்தது தொடர்பாக சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு வந்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் கடந்த ஜூலை 22ஆம் தேதி ''ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது'' என யூ டியூப் சேனலான ரெட்பிக்ஸில் தெரிவித்தது தொடர்பாக சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கின் தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி சிறப்பு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி, தனது தரப்பு விளக்கத்தை அளித்தார். முன்னதாக நீதிபதிகள் வழக்கை தீர்ப்பிற்காக ஒத்திவைத்த நிலையில், சவுக்கு சங்கரும் நீதிமன்றத்திலேயே இருந்தார்.
பின்னர் தீர்ப்பு குறித்த விசாரணை வந்தபோது நீதிபதிகள், சவுக்கு சங்கரை 6 மாதம் சிறையில் அடைக்க உத்தரவிட்டனர். மேலும், இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு காரணமான பதிவுகளை சமூக வலைதளங்களிலிருந்து நீக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய தொழில்நுட்பத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக முகநூல், கூகுள், ட்விட்டர் சமூக வலைதளங்கள் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என Youtube சேனலில் தெரிவித்தது தொடர்பாக சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கின் தீர்ப்புக்கு, சவுக்கு சங்கர் மேல் முறையீடு செய்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.