மூன்றாவது நாளாக உண்ணாவிரதத்தை தொடரும் முருகன்!
11 Sep,2022
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த அவருடைய மனைவி நளினி தற்போது பரோலில் காட்பாடியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி உள்ளார். இருவரும் விடுதலைக்காக பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்த நிலையில் முருகன் தனக்கு பரோல் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
ஆனால் அவருக்கு பல்வேறு காரணங்களால் பரோல் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் அவர் தனக்கு பரோல் வழங்கக்கோரியும், தன் மீது நிலுவையில் உள்ள அவதூறு வழக்கை விரைந்து முடிக்கக்கோரியும் ஜெயிலில் திடீரென உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளார். 3-வது நாளாக ஜெயிலில் வழங்கப்படும் உணவை அவர் உண்ணவில்லை. ஆனால் பழங்களை மட்டும் உட்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
ஜெயில் அதிகாரிகள் அவரை கண்காணித்து வருகின்றனர். அவரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த சென்றனர். அப்போது அவர் அதிகாரிகளிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். யாரிடமும் பேசாமல் இருந்து வருகிறார். மவுன விரதமும் மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.