சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையில் செல்போன் சிக்னல் அடிக்கடி பாதிப்பு
11 Sep,2022
சென்னை மெட்ரோ ரயில்சுரங்கப்பாதையில் செல்போன்சிக்னல் அடிக்கடி தடைப்படுவதால், பயணிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். இந்த தொழில் நுட்ப பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்றுபயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. மெட்ரோ ரயில் முதல்கட்டம், நீட்டிப்பு நிறைவடைந்து, விம்கோ நகர் - விமான நிலையம் வரையும், சென்ட்ரல் - பரங்கிமலை வரையும் மொத்தம் 54.65 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதில், 26.5 கி.மீ. தூரம் சுரங்கப்பாதை வழியாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. 3.57 கோடி பேர் பயணம்: போக்குவரத்து நெரிசல் இன்றி விரைவாகச் செல்ல மெட்ரோ ரயில் வசதியாக இருப்பதால், பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
கடந்த 8 மாதங்களில் மட்டும் 3 கோடியே 57 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். அதிலும், கடந்த மாதம் மட்டும் 56.66 லட்சம் பேர் பயணம் செய்தனர். சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் இருந்தாலும், மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையில் செல்லும்போது, சிக்னல் அடிக்கடி தடைப்படுகிறது.
இதனால் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
தொழில் நுட்ப பிரச்சினை: இது குறித்து மெட்ரோ ரயில் பயணிகள் விமல், கணேசன் கூறியதாவது: மெட்ரோ ரயிலில் சுரங்கப்பாதையில் செல்லும் போது, செல்போனில் சிக்னல் தடைப்பட்டு, நெட்வொர்க் பிரச்சினை ஏற்படுகிறது.
அவசர அழைப்புகளையும் ஏற்று பேச முடியாத நிலை உள்ளது. எனவே, இந்த தொழில் நுட்ப பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.