வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய பெரிய தேர்பவனி: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
08 Sep,2022
மாதாவின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இன்று மாலை 6 மணிக்கு அன்னையின் திருக்கொடி இறக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயம் முக்கிய இடம் வகிக்கிறது. மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தளமாக விளங்கும் மாதாஆலயம் அமைந்துள்ள வேளாங்கண்ணி, கீழே நாடுகளின் 'லூர்து நகர்' என்ற பெருமையுடன் அழைக்கப்படுகிறது. கிறிஸ்தவ ஆலயங்களுக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய 'பசிலிக்கா' என்ற அந்தஸ்து பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் கட்டிட அழகு காண்போரை பிரமிக்க செய்வதாகும். இங்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆண்டு திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.
துன்பத்தில் துவண்டு அமைதி தேடி மன்றாடி வருபவர்களின் மனதை ஆற்றுப்படுத்தி புது வாழ்விற்கு வழிகாட்டி வரும் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 8-ந் தேதி நடக்கிறது. இந்த விழாவில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாதாவை வழிபட்டு செல்வார்கள். விழாவுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வேண்டி விரதம் இருந்த, நடைபயணமாக வேளாங்கண்ணிக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவ்வாறு பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா கடந்த மாதம்(ஆகஸ்டு)் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடங்கியது முதல் ஒவ்வொரு நாளும் பேராலயத்திலும், பேராலய வளாகத்திலும், விண்மீன் ஆலயம், மேல் கோவில், கீழ் கோவில் ஆகிய இடங்களிலும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கு, மராத்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இதேபோல சிலுவை பாதை வழிபாடு, ஜெபமாலை, நவநாள் ஜெபம், மாதா மன்றாட்டு திவ்ய நற்கருணை ஆசி உள்ளிட்ட பிரார்த்தனை நிகழ்ச்சிகள் விமரிசையாக நடந்தன. வேளாங்கண்ணி பேராலய திருவிழாவின் பிரதான நிகழ்ச்சியான மாதா பெரிய தேர்பவனி நேற்று இரவு நடந்தது. தேர்பவனியையொட்டி தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதில் பேராலய அதிபர் இருதயராஜ், பங்குத்தந்தை அற்புதராஜ், பொருளாளர் உலகநாதன், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ் மற்றும் உதவி பங்கு தந்தையர்கள், அருட் தந்தைகள், அருட் சகோதரிகள் கலந்து கொண்டனர்