கனடா செல்ல ஆசைப்பட்ட 11 இலங்கையர்களுக்கு இந்தியாவில் நேர்ந்த கதி!
06 Sep,2022
மீன்பிடி படகில் கனடா செல்ல திட்டமிட்டுள்ளதாக தமிழக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், தெற்கு கேரளாவில் உள்ள கொல்லத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து 11 இலங்கையர்களை கேரள பொலிஸார் நேற்று கைது செய்துள்ளதாக இந்திய தகவல்கள் கூறுகின்றன.
கடந்த வாரம் சுற்றுலா விசாவில் தமிழகம் வந்த இரண்டு இலங்கை பிரஜைகள் காணாமல் போன நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இதனையடுத்து , க்யூ பிராஞ்ச் (சிஐடி பிரிவு) அவர்களின் தொலைபேசி சமிக்ஞைகளைப் பின்பற்றி கொல்லத்தில் அவர்களைக் கண்டுபிடித்ததுடன், குறித்த நபர்களின் நண்பர்களை எச்சரித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு மோசடி முகவர்கள்
அந்த தேடுதலுக்குப் பின்னர் , தமிழ்நாட்டிலிருந்து காணாமல் போன இருவர் உட்பட 11 பேரை பொலிஸார் கைது செய்ததாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கைதானவர்களுள் ஒன்பது பேர் அகதிகளாக இந்தியாவிற்குள் நுழைந்து தென் தமிழகத்தின் ராமநாதபுரத்தில் உள்ள மறுவாழ்வு மையத்தில் தங்கவைக்கப்பட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் கேரள பொலிஸாரிடம் தெரிவித்தனர்.
மேலும் அவர்களிடம் முன்னெடுக்கபப்ட்ட விசாரணையின் போது, அவர்கள் தலா 2.5 இலட்சம் ரூபாவை கொழும்பில் உள்ள முகவரமைப்பிடம் கொடுத்து, இந்தியாவின் தெற்கு கடற்கரையில் இருந்து கப்பல் மூலம் கனடாவுக்குப் பயணம் செய்யவிருந்ததாக கூறியுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.