புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவியவர் கோவிலில் தூக்கிட்டு தற்கொலை!
26 Aug,2022
கொரோனா ஊரடங்கின் போது புலம்பெயர்ந்தவர்களை விமானத்தில் ஊருக்கு அனுப்பி வைத்த விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தியாவில் 2020-ம் ஆண்டு கொரோனா தொற்றின் முதல் அலையின் போது ஊரடங்கு போடப்பட்டது. அப்போது நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மனைவி, குழந்தையோடு பல நூறு கிலோமீட்டர் உணவு, தண்ணீர் இல்லாமல் நடந்து சென்றனர்.
அந்த நிலையில், டெல்லியில் தன்னிடம் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பீகார் செல்வதற்கு, கடும் பொருளாதார நெருக்கடியிலும், விமான டிக்கெட் எடுத்து வழியனுப்பி வைத்தவர் காளான் விவசாயி பப்பன் சிங் கெலாட்.
மேலும், தொழிலாளர்கள் ஊரடங்கு முடிந்து மீண்டும் பணிக்கு திரும்பவும் விமான டிக்கெட் எடுத்து கொடுத்தார். அவரின் இந்த செயல் மூலம் பெரியளவில் பிரபலமானார். இந்த நிலையில் பப்பன் சிங் கெலாட், நேற்று டெல்லியில் உள்ள ஒரு கோவிலில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
பொலிசார் கூறுகையில், கோவிலின் மின்விசிறியில் அவரின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டது. மேலும், அந்த இடத்தில் இருந்து ஒரு தற்கொலைக் குறிப்பும் கிடைத்திருக்கிறது.
அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பியிருக்கிறோம். தற்கொலை தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என கூறியுள்ளனர். விமான டிக்கெட் செலவுக்காக மட்டும் பப்பன் லட்சங்களில் செலவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.