தமிழகத்தில் 36 மணி நேரத்தில் 15 கொலைகள்.. டிஜிபி சைலேந்திர பாபு ‘திடீர்’ விளக்கம் !
25 Aug,2022
தமிழகத்தில் 36 மணி நேரத்தில் 15 படுகொலைகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டை கடந்த 15 மாதங்களில் நான் பலமுறை எடுத்துக் கூறியுள்ளேன். ஆனால், குற்றங்களைத் தடுப்பதில் நிர்வாகத் திறமையற்ற முதலமைச்சர் ஆர்வமின்றி, விளம்பர மோகத்தால் திளைத்துள்ளதால் இன்று தமிழகம் முழுவதும் கொலைக் களமாக மாறி வருவது கண்டு மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.
கடந்த 36 மணி நேரத்தில் 15 படுகொலைக் சம்பவங்கள் அரங்கேறி உள்ளன என்று செய்திகள் வருகின்றன. இந்த கொலைகள் அனைத்தும் ஏதோ எதிர்பாராதவிதமாக நடந்ததாகத் தெரியவில்லை . முன் விரோதம் காரணமாகவும், திட்டமிட்டும் இக்கொலைகள் நடந்துள்ளன என்று செய்திகள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்ட ஒருசிலர் தங்கள் உயிருக்கு ஆபத்து என்று புகார் கொடுத்தும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் காவல் துறையினர் அலட்சியமாக இருந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சட்டம் ஒழுங்கை நானே நேரடியாக கவனித்து வருகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பு கூறினார். இதுதான் அவர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கவனிக்கும் லட்சணமா? இதன் காரணமாக மக்கள் கொந்தளித்து போயுள்ளனர். இந்த படுகொலை சம்பவங்களுக்கு காவல்துறையை கையில் வைத்திருக்கும் ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும்.இனியாவது தமிழக அரசு விழித்துக்கொண்டு கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் பலாத்காரம், போதைப்பொருள் விற்பனை போன்ற சமுதாய சீர்கேடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று கூறினார்.
கடந்த 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்துள்ளதாக சில ஊடகச் செய்திகளில் மிகைப்படுத்தி கூறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு டி.ஜி.பி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியான அறிக்கையில், 'கடந்த 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்ததாக சில ஊடகச் செய்திகளில் மிகைப்படுத்தி கூறப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் 22-08-2022 அன்று 7 கொலைகளும், 23-08-2022 அன்று 5 கொலைகள் மட்டுமே நிகழ்ந்துள்ளது. சில ஊடகங்களில் பட்டியலிடப்பட்ட பல்வேறு கொலை வழக்குகள் ஆகஸ்ட் மாதத்தில் முந்திய நாட்களில் நடைபெற்றவை.
மேலும், பெரும்பாலான கொலை சம்பவங்கள் குடும்ப உறுப்பினர்கள் , தனி நபர்களிடையே முன் விரோதம் காரணமாக நடந்துள்ளது.2022-ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 940 கொலைகள் நடந்துள்ளன. கடந்த 2021-ல் இதே காலக்கட்டத்தில் 925 கொலைகளும், 2019-ம் ஆண்டு 1041 கொலைகளும் நிகழ்ந்துள்ளது. ஆகவே, முந்தைய 2019-ம் ஆண்டை ஒப்பிடுகையில் இந்தாண்டு 101 கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.