பள்ளி தரப்பில் தற்கொலை செய்து கொண்டதாகவும், உறவுகள்- பெற்றோர்கள் தரப்பில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி, 4 நாட்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயதான மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை 13 ஆம் தேதி பள்ளி வளாகத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மாநிலத்தையே அதிர வைத்தது. பள்ளி தரப்பில் தற்கொலை செய்து கொண்டதாகவும், உறவுகள்- பெற்றோர்கள் தரப்பில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி, 4 நாட்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அதற்கு மறுநாளான ஜூலை 17ம் தேதி, பெரும் போராட்டமாக உருவெடுத்து, பள்ளிகள் முற்றிலும் சேதப்படுத்தப்பட்டது.
மேலும் பள்ளி பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டதுடன், பள்ளிகளில் பெரும்பாலான பொருட்கள் சூறையாடப்பட்டது. மாணவி உயிரிழப்பு தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன் ,வேதியியல் ஆசிரியை ஹரி பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டுதல், பாதுகாப்பில் உள்ளவருக்கு தொல்லை கொடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மாணவி ஸ்ரீமதியுடன் அதே பள்ளியில் தங்கிப்படித்த அவரது 2 தோழிகள் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்றத்தின் கதவுகள் மூடப்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் ஆஜராகி, சுமார் 2 மணி நேரம் ரகசிய சாட்சியம் அளித்தனர். ஜிப்மர் மருத்துவ குழுவினரின் அறிக்கை மற்றும் 2 மாணவிகளின் வாக்குமூலம் இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக அமையும் என்கின்றனர் காவல்துறையினர்.
இந்நிலையில் குழு அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை, வீடியோ பதிவை வழங்கக்கோரி மாணவியின் தாயார் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், மனுவை விசாரித்த நீதிபதி, ஜிப்மர் மருத்துவ குழு ஆய்வறிக்கை இன்று வழங்குவதாக அறிவித்தார். இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான ஜிப்மர் மருத்துவக்குழு அறிக்கையை வழங்க இயலாது என்று விழுப்புரம் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை தற்போது நடைபெற்று வருவதால், தற்போது ஜிப்மர் மருத்துவக்குழு அறிக்கையை வழங்க இயலாது என நீதிபதிகள் கூறியுள்ளனர். கள்ளக்குறிச்சியில் நடந்த இரண்டாவது உடற்கூராய்வு அறிக்கை மட்டுமே மாணவி தரப்பு வழக்கறிஞரிடம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஜிப்மர் மருத்துவக்குழு ஆய்வு செய்து அளித்த அறிக்கையை வழங்கக்கோரி மாணவியின் தயார் வழக்கு தொடுந்திருந்த நிலையில், வழங்க இயலாது என விழுப்புரம் நீதிமன்றம் கூறியிருக்கிறது.