சிறையில் அடைக்கப்பட்ட ஒரு பத்திரிகையாளரின் மகள் நான்...” - வைரல் ஆன சித்திக் கப்பன் மகளின் உரை
17 Aug,2022
திருவனந்தபுரம்: தேசத் துரோக சட்டத்தின் கீழ் உத்தரப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டு இரண்டு வருடங்களாக சிறையில் இருந்து வரும் கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பனின் மகள் பேசிய சுதந்திர தின உரை வைரலாகி வருகின்றது.
2020-ஆம் உத்தரப் பிரதேசத்தில் ஹத்ராசில் 19 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட செய்தியை சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் சித்திக் கப்பன் கைது செய்யப்பட்டார். தேசத் துரோக சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சித்திக் கப்பனுக்கு இரண்டு வருடங்களாக ஜாமீன் வழங்கப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், சித்திக் கப்பனின் மகள் ஹெஹ்னஸ் காப்பான் தனது பள்ளி சுதந்திர தின விழாவில் அரசியல், மதம் சார்ந்து நடக்கும் வன்முறைகள் குறித்து பேசி இருக்கிறார்.. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
மெஹ்னஸ் கப்பன் பேசும்போது, “அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட ஒரு பத்திரிகையாளரின் மகள் நான். ஒவ்வொரு இந்தியருக்கும் அவர்கள் என்ன பேச வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், எந்த மதத்தை பின்பற்ற வேண்டும் என தீர்மானிக்க உரிமை உள்ளது. இவை அனைத்தும் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, பகத் சிங் போன்ற எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் போராட்டங்களாலும், தியாகங்களாலும் நமக்கு சாத்தியமானது.
சுதந்திரப் போராட்ட தியாகிகளை நினைவுகூரும் நாளில் நாட்டு மக்களிடம் இருக்கும் உரிமையும், சுதந்திரத்தையும் பறிக்காதீர்கள் என வலியுறுத்திக்கிறேன். இந்தியாவின் பெருமை யாரிடமும் அடிபணியக் கூடாது.
அமைதியின்மையை விளைவிக்கும் நிழல் கூட துடைக்கப்பட வேண்டும். நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து, இந்தியாவை மேலே கொண்டு செல்ல அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும். வேறுபாடுகள் மற்றும் மோதல்கள் இல்லாத சிறந்த நாளைக் கனவு நாம் காண வேண்டும். இந்தியா தனது 76-வது சுதந்திர தினத்தில் அடியெடுத்து வைக்கும் இந்தச் சிறப்பு தருணத்தில், அசைக்க முடியாத பெருமையும் அதிகாரமும் கொண்ட ஒரு இந்தியனாக, 'பாரத் மாதா கி ஜே' என்று கூற விரும்புகிறேன்” என்று பேசினார்.