நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளை அகற்றிவிட்டு, ஜிபிஎஸ் மூலம் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு கி.மீ. கணக்கில் நாடு முழுவதும் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. சுங்கச் சாவடிகளில் தொடக்கத்தில் ரொக்கமாக கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு ‘பாஸ்டேக்’ முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதன்பின், சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை குறைந்தது.
பாஸ்டேக் முறையில் முழு பலன் கிடைக்காத நிலையில், அதையும் சரி செய்ய மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை அமைச்சகம் நீண்ட காலமாக ஆய்வுசெய்து வந்தது. இதன் பலனாக செயற்கைக்கோள் மூலம் வாகனங்களுக்கான சுங்க கட்டணம் வசூல் செய்ய தற்போது திட்டமிட்டுள்ளது. இந்த முறையால், பாஸ்டேக் மற்றும் சுங்கச் சாவடிகளுக்கான தேவையும் இல்லாமல் போகும். எனவே, நாடு முழுவதிலும் உள்ள சுங்கச் சாவடிகளை அகற்றிவிட்டு ஜிபிஎஸ் திட்டத்தை அமல்படுத்த மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து 2 நாட்களுக்கு முன்னர் நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மத்தியப் தரை வழிப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளிக்கையில், ”சுங்கச் சாவடி கட்டண வசூலை இனி நவீன தொழில்நுட்பம் மூலம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறையில், சுங்க கட்டண வசூலை எவரும் திருட முடியாது. அதேநேரத்தில் கட்டண விதிப்பில் இருந்து தப்பவும் முடியாது. இதற்கான சட்டத் திருத்தம் செய்யப்பட்டு அடுத்த 6 மாதங்களில் அமலுக்குக் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார்.
தற்போது, தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்கள், அரசியல் கட்சியினர், அதிகாரிகள் சிலர் சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்த மறுத்து பிரச்சினையிலும் ஈடுபடுகின்றனர். மேலும் சுங்கச் சாவடிகளில் மோதலில் ஈடுபட்டு கட்டணம் செல்லாமல் செல்பவர்களை தண்டிக்கவும் வழியில்லாமல் உள்ளது. இவை அனைத்துக்கும் ஜிபிஎஸ் மூலம் கட்டணம் வசூலிக்கும் முறை தீர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக வாகனங்கள் செல்லும் சாலைகளின் தூரத்தை பொறுத்து சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளது. இதனால், வாகன உரிமையாளர்கள் ஒரு சுங்கச் சாவடியில் இருந்து அடுத்த சுங்கச் சாவடி வரை செல்லாமல் நடுவழியிலேயே இலக்கை அடைந்தால், அவர்கள் சென்ற தூரத்துக்கு ஏற்ப கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளது. இதனால் வாகனங்களில் செல்வோருக்கு கட்டணமும் குறையும்.
இந்த ஜிபிஎஸ் முறைக்கு ஏற்றபடியே தற்போது நாட்டின் அனைத்து வாகனங்களுக்கும் அதன் ‘நம்பர் பிளேட்’ மின்னணு தொழில்நுட்பத்துடன் மாற்றப்பட உள்ளது. இந்த பணி முடிந்தால்தான், ஜிபிஎஸ் முறையில் சுங்க கட்டண வசூல் சாத்தியமாகும். நாடு முழுவதும் சராசரியாக 67 சதவிகிதம் பேர் மட்டும் பாஸ்டேக்கில் கட்டணம் செலுத்துகின்றனர். இதில், அன்றாடம் சுமார் ரூ.120 கோடி வசூல் செய்யப்படுகிறது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மாநிலங்களவையில் தெரிவித்தார். பாஸ்டேக் இல்லாமல் ரொக்கமாக நடக்கும் வசூல் அதை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.