ஒவ்வொரு இந்திய குடிமகனும் அடிப்படை சட்டங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக பெண்கள் இது போன்ற சட்டங்களை தெரிந்து வைத்திருப்பது மிகவும் நல்லது. அவ்வகையில் போலீசில் புகார் அளிப்பது முதல் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்குவது வரை எந்தெந்த சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
முதலில் நீங்கள் ஒருவரின் குற்றத்தை அறியும்போது, காவல்நிலையை அணுக வேண்டும். அங்கு சென்று வாய் வார்த்தையாக இல்லாமல் எழுத்துப்பூர்வமாக நீங்கள் புகார் அளிக்க வேண்டும். நீங்கள் அளித்த புகாரில் போலீசார் விசாரிக்கும் நிலை இருக்கிறதா அல்லது நீதிமன்றத்தை அணுக வேண்டுமா என்று போலீசார் அதனை பார்ப்பார்கள்.
அப்படி போலீசாரால் அந்த பிரச்சனையை முடிக்க முடிந்தால், காவல்துறையினர் நீங்கள் அளித்த தகவல்களை பெற்றதும் முதல் தகவல் அறிக்கை அதாவது FIR எனப்படும் எழுத்துப்பூர்வ ஆவணத்தை தயாரிப்பார்கள். அதன் பிறகு உடனே சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து செல்வார்கள். பின்னர் பாதிக்கப்பட்டவர் மற்றும் அந்த இடத்தில் சம்பவத்தை பார்த்ததற்கான சாட்சிகள் என அனைவரையும் விசாரிப்பார்கள்.
அவ்வாறு விசாரித்த பின்னர் சாட்சிகளையும் ஆதாரங்களையும் திரட்டிக் கொள்வர். அது மட்டுமல்லாமல் யார் மேலாவது சந்தேகம் இருந்தால் அவரையும் கைது செய்து விடுவர். ஒரு நபரை கைது செய்து விட்டால் போலீசாருக்கு 24 மணி நேரம் மட்டுமே அவகாசம். அதற்குள் அந்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும்.
அவ்வாறு ஆஜர் படுத்திய பின்னர்,போலீசார் அந்த நபரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என்றும் இவர் வெளியில் இருந்தால் ஆதாரங்களை அழித்து விடுவார் என்றும் நீதிமன்றத்தில் கூறுவார்கள். அவ்வாறு போலீசார் கூறும் போது கைது செய்யப்பட்ட நபருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்படும்.
பின்னர் போலீசார் மேலும் சில ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை திரட்டி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். அதாவது அதுதான் இறுதி அறிக்கை. அந்த இறுதி அறிக்கையை வைத்து தான் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கும்.
அப்போது பாதிக்கப்பட்டவர்,கைது செய்யப்பட்டவர் மற்றும் போலீசார் என அனைத்து தரப்பினரும் அங்கு தங்கள் வாதத்தை முன்வைப்பர். அந்த வாதத்தில் குற்றம் சுமத்தப்பட்டவர் மீது சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்றால் அவரை நிரபராதி என்று கூறி நீதிமன்றம் விடுதலை செய்து விடும்
ஆனால் கைது செய்யப்பட்டவர் மீதான குற்றங்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளி என்று முத்திரை பதித்து தண்டனை விதித்து சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிடும். இந்த நடைமுறைதான் புகார் அளிப்பது முதல் நீதிமன்ற விசாரணை வரை நடைபெறும்.
FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும்போது தகவல் கொடுப்பவரின் கையொப்பம் பெறுதல் அவசியம். அவ்வாறு தகவல் கொடுப்பவர் கையொப்பமிட மறுத்தால், போலீசாரும் விசாரணை செய்ய மறுத்துவிடலாம். முதல் தகவல் அறிக்கை கொடுத்தவர் எழுதப் படிக்க தெரியாதவராக இருக்கும் பட்சத்தில், அது எழுதப்பட்டபின் அவருக்கு படித்து காட்டப்பட வேண்டும். இந்த தகவல் காவல் துறையின் நாட்குறிப்பேட்டில் பதிவுசெய்துகொள்ள வேண்டும். எஃப்ஐஆர் பதினாதும் அதன் நகலொன்று தகவல் கொடுத்தவருக்கு எந்த கட்டணமும் இன்றி உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
காவல் நிலையத்தின் பொறுப்பான காவல்துறை அதிகாரி அல்லது வேறு எந்த பொறுப்பாளரும் பிடியாணை வேண்டாக் குற்றத்திற்கு காரணமின்றி எஃப்ஐஆர் பதிவு செய்ய மறுக்கலாம். அத்தகைய மறுப்பால் வேதனைப்படும் எந்தவொரு நபரும் எழுத்துப்பூர்வமாக குற்றத்தின் தகவலை தபால் மூலம் காவல்துறை கண்காணிப்பாளருக்கு அல்லது மாஜிஸ்திரேட்டுக்கு அனுப்பலாம். இதற்கு சிஆர்பிசியின் பிரிவு 154 (3) அல்லது பிரிவு 156 (3) வழிவகை செய்கிறது.