சீன கப்பல் சர்ச்சையை தொடர்ந்து இலங்கை வரும் பாகிஸ்தான் ஏவுகணை போர்க்கப்பல்?
10 Aug,2022
சீன இராணுவக் கப்பல் தொடர்பாக சர்ச்சை ஏற்பட்ட நிலையில், தற்போது இலங்கைவரும் பாகிஸ்தான் ஏவுகணை போர்க்கப்பல் தொடர்பாக கரிசனை வெளியிட்டு இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான தைமூர் என்ற ஏவுகணை போர்க்கப்பலுக்கு கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைய இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியதாக கூறப்படுகின்றது.
கம்போடிய மற்றும் மலேசிய கடற்படையினருடனான இராணுவ பயிற்சியின் பின்னர் சீனாவில் தயாரிக்கப்பட்ட இந்த போர்க்கப்பல் பாகிஸ்தானுக்கான தனது முதல் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது.
மலேசியாவில் உள்ள லுமுட் துறைமுகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்று கொண்டிருந்த கப்பல், பங்களாதேஷின் சத்ரோகிராம் துறைமுகத்திற்கு நுழைய அனுமதி கோரியது, ஆனால் பங்களாதேஷ் அரசாங்கம் அனுமதி வழங்காததால் கப்பல் இலங்கை வரவுள்ளது.
அதன்படி, இந்த ஏவுகணை போர்க்கப்பல் எதிர்வரும் 12ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.