இலங்கை நபரிடம் என்.ஐ.ஏ., விசாரணை
06 Aug,2022
திருப்போரூர்--திருப்போரூர் பகுதியில் தங்கி யிருந்த இலங்கை நபரிடம், என்.ஐ.ஏ., அதிகாரிகள், நேற்று விசாரணை நடத்தினர்.செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த தையூரில் முகமது பைசல், 43, என்பவர், வாடகை வீட்டில் வசிக்கிறார்.
தேசிய புலனாய்வு முகமை எனும் என்.ஐ.ஏ., அதிகாரியான எபிசன் பிரோன்கோ தலைமையிலான குழுவினர், இவரது வீட்டிற்கு நேற்று வந்தனர்.என்.ஐ.ஏ.,வால் ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஒரு நபருடன், முகமது பைசல் மொபைல் போனில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் என்.ஐ.ஏ., அதிகாரிகள், தையூரில் விசாரணை மேற்கொண்டனர்.வீட்டில் இருந்த லேப்டாப், மொபைல் போன், ஆதார் கார்டு, இலங்கை பாஸ்போர்ட் ஆகியவற்றை கைப்பற்றினர்.
ஆதார் கார்டு போலியானதா என விசாரிக்கும் அதிகாரிகள், முகமது பைசலை சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:முகமது பைசல், இலங்கை கொழும்பு நகரத்தைப் பூர்வீகமாய் உடையவர். நான்கு ஆண்டுகளுக்கு முன், டில்லியில் தங்கியிருந்தார். அங்கிருந்து, தமிழகம் வந்து, கழிப்பட்டூர் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் மனைவி, மகனுடன் தங்கினார்.கடந்த நான்கு மாதங்களாக, தையூரில் தங்கியுள்ளார். இவர் மீது, சில வழக்குகள் இருப்பதால் விசாரிக்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்