வேளாங்கண்ணி கடலில் வலைகளை கொண்டு தடுப்புவேலி.. உயிர்பலிகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை - சுற்றுலா பயணிகள் பாராட்டு
30 Jul,2022
வேளாங்கண்ணி-கடலில் மூழ்கி உயிர் பலி ஏற்படுவதை தடுக்க வேலி அமைப்புவேளாங்கண்ணி-கடலில் மூழ்கி உயிர் பலி ஏற்படுவதை தடுக்க வேலி அமைப்பு
வேளாங்கண்ணி கடலில் குளிக்கும்போது ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் வலைகள் மூலம் பேரூராட்சி நிர்வாகம் தடுப்பு வேலி அமைக்க ஏற்பாடு செய்துள்ளது.அத்துடன் படகு மற்றும் உயிர் காக்கும் சாதனங்களுடன் 6 நீச்சல் வீரர்களை கொண்ட மீட்பு குழுவினரை நியமனம் செய்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க பல்வேறு முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி வேளாங்கண்ணி பேரூராட்சி சார்பில், கடலில் குளிக்கும்போது ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் ஒரு படகு மற்றும் உயிர் காக்கும் சாதனஙகள், 6 நீச்சல் வீரர்களுடன் கூடிய மீட்புக் குழுவினரை அமைத்துள்ளனர்.
இன்று முதல் குழுவினர் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் அதற்கான பூஜை பேரூராட்சி தலைவர் டயானா ஷர்மிளா தலைமையில் நடைபெற்றது. வேளாங்கண்ணி கடற்கரையில் குறிப்பிட்ட துாரம் வரை மட்டுமே குளிக்கும் வகையில் கடல் பகுதியில் 300மீட்டர் தூரத்திற்கு தடுப்பு வேலிகள் வலைகள் மூலம் தற்போது அமைக்கப்பட்டுள்ளது.
அதற்குள் மட்டுமே பக்தர்கள், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள். அதனை மீறுவோரை உடனடியாக கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் தொடர்ந்து மீட்புக்குழுவினர் கண்காணிப்பை தொடர்ந்து மேற்கொள்ளும் நிலையில் யாராவது நீரில் அடித்துச் செல்லப்பட்டால், உடனடியாக அவர்களை மீட்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
பக்தர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை, அதேநேரத்தில் நாமும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றே பேரூராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் பொதுமக்களிடம் வலியுறுத்துகின்றனர். உயிரிழப்பை தடுக்கும் வகையில் பேரூராட்சி நிர்வாகத்தின் இந்த முன்னெடுப்பு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.