"தமிழ்நாட்டை நான் தான் ஆளப்போறேன்": சீமான் அதிரடி!
27 Jul,2022
அடுத்த 4 அல்லது 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டை தாம் தான் ஆளப்போவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழ் தேச தன்னுரிமை கட்சியின், தமிழக மக்கள் தன்னாட்சி மாநாடு நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் 6 லட்சம் கோடி தமிழக அரசுக்கு கடனிருக்கும் போது 80 கோடியில் பேனா வைக்க திட்டம் போடுகிறார்கள் என கலைஞர் நினைவிடம் அருகே பேனா நினைவுச் சின்னம் வைக்கப் போவதை விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இலங்கையில் அதிகாரமும் இல்லை அரசும் இல்லை. இந்த நிலையிலும் தமிழ் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி வந்ததாக கேரள மீனவர்கள் ஒருவர்கூட இதுவரை கைது செய்யப்பட்டது கிடையாது.
அதற்கு காரணம் கேரளவின் ஆட்சியாளர்கள் அந்த மண்ணை சார்ந்தவர்கள். தமிழகத்தை வெளியே இருந்து வந்தவர்களே ஆட்சி செய்கிறார்கள். இந்த மண்ணை சேர்ந்த 2 பேர் அடிமையாகி இருக்கிறார்கள் என விமர்சித்தார்.
நீரை தேக்கிவைக்க பல வழிகள் இருந்தும் அதனை செய்யாமல் 50 ஆயிரம் கோடி செலவு செய்து கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை அமைக்க இருக்கிறார்கள். அதிகபட்சமாக 4 அல்லது 5 ஆண்டுகளில் தமிழகத்தில் நான் தான் ஆட்சி செய்வேன். தமிழகத்தில் இருந்து கிடைக்கும் அனைத்து வளமும் நமக்கு தான் என்றார்.