கைலாசா சார்பில் 4 மாதங்களில் ரூ.200 கோடி பரிசு வழங்கப்படும்- நித்யானந்தாவின் புதிய அறிவிப்பு
21 Jul,2022
சாமியார் நித்யானந்தா 3 மாத இடைவெளிக்கு பிறகு கடந்த 13-ந்தேதி சமூக வலைதளங்கள் மூலம் மீண்டும் நேரில் தோன்றினார். தொடர்ந்து நேற்று முன்தினமும் நேரலையில் தோன்றிய அவர் சாதுர்மாசி எனப்படும் இன்னும் 4 மாதங்களில் உலகம் முழுவதும் சேவை ஆற்ற பல்வேறு திட்டங்களை வைத்திருப்பதாக கூறினார். மேலும் கைலாசா ஒன்றால் மட்டுமே சேவை ஆற்ற முடியாது என்பதால், அதுபோன்ற சேவை செய்கின்ற பல பேரை உற்சாகப்படுத்தி அவர்களுக்கு விருதுகள் மற்றும் ரொக்கப் பரிசு வழங்க இருப்பதாக அறிவித்தார்.
அதன்படி உலகம் எங்கும் கடும் சிரமங்களுக்கு மத்தியில் ஏழை-எளியவர்களுக்கு அன்னதானம் செய்யும் ஆயிரம் பேருக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசுடன் 'அன்னலட்சுமி விருது' வழங்கப்படும் என அறிவித்தார். இதே போல விலைவாசி உயர்வு உச்சமாக இருக்கும் இந்த கால கட்டத்தில் 1 ரூபாய்க்கு இட்லி, 10 ரூபாய்க்கு தோசை என குறைந்த விலைக்கு உணவு பொருட்கள் விற்பவர்கள் ஆயிரம் பேரை கண்டறிந்து அவர்களுக்கு தலா ரூ.1 லட்சத்துடன் 'அன்னதாத்தா விருது' வழங்கப்படும். இந்து மதத்திற்காக உழைத்து உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு பொருளாதார உதவியும், விருதும் வழங்க உள்ளோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு
ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். தனி ஒரு குடும்பமாக இருந்து வாழ்வாதாரத்துக்கு சிரமப்பட்டாலும், பாரம்பரிய பணியை தொடரும் கிராம கோவில்களில் பணியாற்றும் சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள், கிராம பூசாரிகள் என குறைந்தபட்சம் 1,008 பேருக்கு 'கைலாசா ஆச்சார்யா' விருதுடன் ரூ.1 லட்சம் பணம் வழங்கப்படும். பல கிராமங்களில் தனி ஆளாக தேவாரம், திருப்பாவை, திருவெண்பாவை, ராமாயணம் கற்றுத்தருபவர்கள், நாடகம் மூலம் கொண்டு சேர்ப்பவர்களை கண்டறிந்து ஆயிரம் பேருக்காவது ரூ.1 லட்சம் பணத்துடன் கூடிய 'கைலாசா ஞானசிரோமணி
என்ற விருதை வழங்குகிறோம். அடுத்து, தனி மனிதராக வறுமையை பற்றி கவலைப்படாமல் குழந்தைகளுக்கு வேதம் கற்றுத்தரும் ஆயிரம் பேருக்கு தலா ரூ.1 லட்சத்துடன் 'கைலாசா வேதவித்யா சிகாமணி' விருது வழங்கப்படும். சமூக வலைதளங்கள் மூலம் இந்து மதம் சார்ந்த சேவை செய்யும் யூ-டியூபர்கள் 1,008 பேருக்கு ரூ.1 லட்சத்தோடு கைலாசா விருதும் வழங்கப்படும். கைலாசா தான் மட்டும் சேவை செய்வதோடு நிறுத்தாமல், சேவை செய்பவர்களை ஊக்கப்படுத்துகின்ற பணியில் ஈடுபடுமாறு கைலாசாவின் அன்பர்கள், பக்தர்கள், சீடர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
இன்னும் சில பிரிவுகளை சேர்க்கிறோம். குறைந்த விலையில் வைத்தியம் பார்க்கும் மருத்துவர்களை கண்டறிந்து 'கைலாய வைத்திய சிகாமணி' விருதுடன் தலா 1 லட்சம் வழங்கப்படும். இந்து மதத்திலே மிகப்பெரிய ஒரு விஷயம் ஸ்தல யாத்திரை. கிராமங்களில் சிறுசிறு குழுக்கள் அமைத்து யாத்திரைக்கு அழைத்து செல்லும் குழு தலைவர்கள் ஆயிரம் பேருக்கு ரூ.1 லட்சத்துடன் 'கைலாசா யாத்திர சிகாமணி' என்ற விருதை வழங்குகிறோம். இதுபோன்று 21 வகை பிரிவுகளை சேர்ந்த சேவையாளர்களுக்கு ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தபட்சம் ஆயிரம் பேருக்காவது ரூ.1 லட்சத்துடன் கூடிய கைலாசா விருதுகளை இந்த 4 மாத சாதுர்மாசியத்துக்குள் வழங்கிவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மொத்தத்தில் 21 பிரிவுகளில் ரூ.200 கோடிக்கு மேல் நித்யானந்தா அறிவித்துள்ள பரிசுத் தொகை திட்டம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.