தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான மின் நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதால் மின் கட்டண உயர்வை அறிவித்துள்ளது மாநில அரசு. ஆனால், மின் துறையில் உள்ள பிரச்னைகளைத் தீர்க்க இந்த நடவடிக்கை மட்டும் போதுமானதா?
தமிழ்நாட்டில் கடந்த எட்டு ஆண்டுகளாக மின்சார கட்டணம் உயர்த்தப்படவில்லை. 2014ஆம் ஆண்டு டிசம்பரில் கடைசியாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டது (2017ஆம் ஆண்டில் மிகச் சிறிய அளவில் மின் கட்டணம் திருத்தப்பட்டது). ஆனால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் ஆகியவற்றின் வருடாந்திர இழப்புகள் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், அவற்றின் ஒட்டுமொத்த இழப்பும், அந்த இழப்பை ஈடுகட்ட வாங்கிய கடனுக்கான வட்டித் தொகையும் தொடர்ந்து அதிகரித்துவந்தன. 2011 - 12ல் 18,954 கோடி ரூபாயாக இருந்த மொத்த இழப்பு தற்போது 1,13,266 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு அரசு உதய் திட்டத்தில் கையெழுத்திட்ட பிறகு, மின் வாரியத்தின் இழப்பை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். 2021ஆம் ஆண்டிலிருந்துதான் இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பதால், மின்வாரியம் தனது இழப்புகளைக் கடன் வாங்கியே சமாளித்து வந்தது. ஆகவே, மின் வாரியத்தின் மொத்த கடனானது 1,59,823 கோடி ரூபாயாக இருக்கிறது. இதற்கான வட்டித்தொகையாக மட்டும் வருடத்திற்கு 16,511 கோடி ரூபாயை மின்வாரியம் செலுத்தி வருகிறது.
மின்கட்டண உயர்வுக்கான காரணம் என்ன?
இந்தியா முழுவதுமே மின் வாரியங்கள் பெரும்பாலும் மிக நெருக்கடியான நிதி நிலையுடனேயே போராடி வருகின்றன. இந்த நிலையில், மத்திய அரசு அறிமுகப்படுத்திய உதய் திட்டத்தின் கீழ், மின் வாரியங்களின் கடன் தொகையில் 75 சதவீதத்தை மாநில அரசுகள் ஏற்றுக்கொண்டு, அவற்றைத் திருப்பிச் செலுத்த வேண்டும்.
தமிழ்நாடு அரசு 2016ல் உதய் திட்டத்தில் கையெழுத்திட்டது. 2017லிருந்து தற்போதுவரை 22,825 கோடி ரூபாய் மட்டுமே மின் வாரியத்தின் கடனுக்காக அளித்துள்ளது. மீதமுள்ள கடன் தொகையோடு மின்வாரியம் தொடர்ந்து போராடி வருகிறது.
மின் வாரியங்களை பொறுத்தவரை ஊரக மின் வசதிக் கழகம் (REC), மின்சார நிதிக் கழகம் (PFC) ஆகியவற்றிடமிருந்து கடன்களைப் பெறுகின்றன. தற்போது இந்த நிதி நிறுவனங்களிடமிருந்து நிதியைப் பெற, ஒவ்வொரு வருடமும் மின் கட்டணத்தைத் திருத்தம் செய்ய வேண்டுமென்பதை நிபந்தனை ஆக்கியுள்ளது.
அதேபோல, மத்திய அரசு மின் விநியோகத்தை வலுப்படுத்தும் திட்டம் ஒன்றைச் செயல்படுத்தி வருகிறது. அதன் மூலம் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் 10,793 கோடி ரூபாய் மானியத்தைப் பெற வேண்டுமானாலும் ஆண்டு தோறும் மின்சார கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும்.
அதேபோல, வணிக ரீதியில் செயல்படும் வங்கிகள் அரசின் மின் பகிர்மான நிறுவனங்களுக்கு கடன் கொடுக்கும்போது, அந்த நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30ஆம் தேதிக்குள் மின் கட்டணத்தைத் திருத்தியதற்கான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளது.
இந்த நிதி சிக்கலின் பின்னணியில்தான் தமிழ்நாடு அரசு நுகர்வோருக்கான மின் கட்டணத்தை அதிகரிக்க முடிவு செய்திருக்கிறது. அதன்படி 100 யூனிட்டிலிருந்து 200 யூனிட் வரை மின்சாரத்தைப் பயன்படுத்தும் பயனாளர்களுக்கு மாதத்திற்கு ரூ. 27.50 அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக 800லிருந்து 900 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 565 ரூபாய் மாதம் அதிகரிக்கப்படும். அதேபோல வணிக ரீதியில் மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கும் தொழிற்சாலைகளுக்கும் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இது தவிர, செலவைக் குறைப்பதற்காக மற்றொரு திட்டத்தையும் மின் வாரியம் முன்வைத்துள்ளது. அதாவது, தற்போது வீட்டுப் பயன்பாட்டிற்கான மின்சாரத்தில் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது.
ஆனால், மிக வசதியானவர்களும் இந்த இலவச மின்சாரத்தை பயன்படுத்தி வரும் நிலையில், அவர்களில் யாராவது தாமாக முன்வந்து இந்த இலவச மின்சாரத்தை விட்டுக்கொடுக்க விரும்பினால், விட்டுக்கொடுக்கலாம். அதற்கான விரிவான பிரச்சாரத்தை தமிழ்நாடு மின்வாரியம் துவங்கவுள்ளது.
ஆனால், இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் போதுமானவை அல்ல என்கிறார் தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் சங்கத்தின் தலைவர் எஸ். காந்தி.
"முதலில் மின் வாரியத்திற்கு இந்தக் கடன் எப்படி வந்தது என்பதை வெளிப்படையாகப் பேச வேண்டும். மின்சார வாரியத்தின் பல தவறான நடவடிக்கைகளால்தான் இவ்வளவு பெரிய அளவில் கடன்கள் ஏற்பட்டன. குறிப்பாக, தனியார் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் ஆகியவை banking என்ற பெயரில் செய்யும் முறைகேடுகள் இதில் மிக முக்கியமானது," என்கிறார் காந்தி.
அதாவது, காற்றாலையைச் சொந்தமாக வைத்திருக்கும் தனியார் நிறுவனங்கள் காற்றாலை மின் உற்பத்தி அதிகமாக உள்ள காலங்களின் மின்சாரத்தை மின் வாரியத்திற்கு விற்பனை செய்கின்றன. ஆனால், மின்சாரம் அதிகம் தேவைப்படும் கோடை காலங்களில் மின் வாரியத்திடமிருந்து மின்சாரத்தை வாங்கி அந்தக் கணக்கை நேர் செய்கின்றன. ஆனால், கோடை காலத்தில் மின் வாரியம் ஒரு யூனிட் 17 முதல் 19 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்குகிறது. ஆனால், காற்றாலை மின்சாரத்தின் விலை 3 -4 ரூபாய்தான். மின் வாரியத்திற்கு மின்சாரம் தேவைப்படாத காலத்தில் மின்சாரத்தைக் கொடுத்துவிட்டு, மின்தட்டுப்பாட்டு காலத்தில் பெறுவது எந்த வகையில் சரி?" என்கிறார் காந்தி.
தமிழ்நாட்டில் வீட்டு நுகர்வோருக்கு கொள்முதல் விலையைவிட குறைவான விலைக்கே மின்சாரம் வழங்கப்படுகிறது. அதேபோல, விவசாய பம்ப் செட்களுக்கான மின்சாரமும் முழுமையாக இலவசமாக வழங்கப்படுகிறது. வணிகப் பிரிவினருக்கும் தொழிற்சாலைகளுக்கும் வழங்கும் மின்சாரம் கொள்முதல் விலையை விட அதிக விலைக்கு விற்கப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் லாபம், மேலே சொன்ன செலவுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
தமிழ்நாடு மின்சார கட்டண உயர்வு
ஆனால், கடந்த சில ஆண்டுகளில் தொழிற்சாலைகள் மின் வாரியத்திடமிருந்து மின்சாரத்தைப் பெற்றுப் பயன்படுத்துவது வெகுவாகக் குறைந்திருக்கிறது. இதனால், அவற்றிலிருந்து கிடைக்கும் லாபமும் குறைந்துவிட்டது. இதில் சில நிறுவனங்கள் முறைகேடுகளைச் செய்வதாகச் சொல்கிறார் காந்தி. "தொழிற்சாலைகள் தனியாரிடமிருந்து நேரடியாக மின்சாரத்தை வாங்கினால் மின்வாரியத்தின் கட்டமைப்பைப் பயன்படுத்தியே அந்த மின்சாரம் கடத்தப்படுவதால், மின்வாரியத்திற்குக் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், பல தொழிற்சாலைகள் தங்களுக்குச் சொந்தமாக மின் உற்பத்தி நிலையங்கள் இருப்பதாகக் கூறி, மின் வாரியத்திடமிருந்து மின்சாரம் பெறுவதில்லை. ஆனால், பல தொழிற்சாலைகளுக்கு சொந்தமாக மின் உற்பத்தி ஆலைகள் தொழிற்சாலையிலேயோ, அவற்றுக்கு அருகிலேயோ இருப்பதில்லை. வேறெங்கோ இருக்கும் தனியார் ஆலைகளின் பங்குகளை வாங்கிக்கொண்டு அந்த ஆலைகளைத் தமது ஆலைகளாகக் காட்டி, மின்வாரியத்திற்கு கூடுதல் கட்டணம் செலுத்துவதிலிருந்து தப்புகின்றன. ஆகவே, சொந்த மின் உற்பத்தி நிலையங்கள் (Captive plants) எவை என்பது குறித்து மின்வாரியம் தெளிவான விதிகளை வகுக்க வேண்டும்." என்கிறார் காந்தி.
அதேபோல, தற்போது சூரிய ஒளி மூலம் கிடைக்கும் மின்சாரம் ஒரு யூனிட் மூன்று ரூபாய் என்ற அளவுக்கு இருக்கும்போது, சில வருடங்களுக்கு முன்பாக ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒரு யூனிட் ரூ. 7.01 விலைக்கு வாங்குவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது குறித்தும் காந்தி கேள்வி எழுப்புகிறார். சந்தையில் மிகக் குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்கும்போது, ஒரு நிறுவனத்திடமிருந்து 25 ஆண்டுகளுக்குக் கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்குவது ஏன் என்கிறார் அவர்.
அதேபோல, 2013- 2014ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மின்தேவை இருப்பதாகக் காட்டி, ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து ரூ. 7 -9 விலையில் பல ஆண்டுகளுக்கு மின்சாரம் வாங்கப்பட்டது. ஆனால், மின் தேவை அந்த அளவுக்கு இல்லை என்பதால், நிலைக் கட்டணமாக (வாங்குவதாகச் சொன்ன மின்சாரத்தை வாங்காவிட்டால் செலுத்த வேண்டிய கட்டணம்) 3,500 கோடி ரூபாய் செலுத்தப்பட்டிருக்கிறது என்கிறார் காந்தி. இத்தனைக்கும் அந்தத் தருணத்தில் எக்சேஞ்சில் ஒரு யூனிட் ரூ. 3.09க்குக் கிடைத்தது என்பதை சுட்டிக்காட்டுகிறார் காந்தி.
மின் வாரியத்தின் கடன் ஏகத்திற்கும் உள்ள நிலையில், தற்போதைய கட்டண உயர்வால் மின் வாரியத்திற்கு கூடுதலாக எவ்வளவு தொகை கிடைக்கும் என்பதைப் பற்றி மின்சாரத் துறை அமைச்சர் ஏதும் சொல்லவில்லை. "இந்தக் கட்டண உயர்வின் மூலம் மின் வாரியத்திற்குக் கூடுதலாக 3 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்குமெனக் கருதலாம். ஆனால், மின் வாரியத்தின் கடன் ஒன்றே கால் லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் நிலையில், இனி வருடம் தோறும் மின் கட்டண உயர்வை எதிர்பார்க்கலாம்" என்கிறார் அவர்.
இவை தவிர, மின்சாரத்தின் கொள்முதல் விலைக்கும் விற்பனை விலைக்கும் இடையிலான வித்தியாசத்தை ஒவ்வொரு அமைப்பும் மாற்றி மாற்றிச் சொல்வதாகச் சொல்கிறார் காந்தி. மின் வாரியம் அளிக்கும் புள்ளிவிவரங்களின்படி கொள்முதல் விலைக்கும் விற்பனை விலைக்கும் இடையிலான வித்தியாசம் ஒரு யூனிட்டிற்கு 1.26 ரூபாயாக இருக்கிறது. ரேட்டிங் ஏஜென்சிகள் இந்த வித்தியாசத்தை ஒரு யூனிட்டிற்கு 74 பைசா என மதிப்பிட்டுள்ளன. ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம் நிதி அமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையின்படி விலை வித்தியாசம் ஒரு யூனிட்டிற்கு ரூ. 2.14. இதில் எந்த புள்ளி விவரம் உண்மை எனக் கேள்வியெழுப்புகிறார் காந்தி.
தமிழ்நாடு மின்வாரியத்தைப் பொறுத்தவரை 2024-25க்குள் மின் இழப்பை 11.92 சதவீதமாகக் குறைப்பது, மின்சார விலையில் உள்ள வித்தியாசத்தை பூஜ்யமாக்குவது ஆகியவற்றை இலக்காகக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் பெரிய அளவில் இழப்பைச் சரிசெய்ய முடியுமென மின் வாரியம் கருதுகிறது.