சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவை, தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வரும் 26ல் சந்திக்க உள்ளார். அப்போது இந்த திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை விமான நிலைய விரிவாக்கத்திற்கு சாத்தியமில்லாததால், சென்னை அருகே இரண்டாவது விமான நிலையம் அமைப்பது தொடர்பாக நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக நான்கு இடங்களை தமிழக அரசு
பரிந்துரைத்திருந்தது.
இதில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுாரை அடுத்துள்ள பரந்துார் மற்றும் பன்னுார் இடங்கள், தகுதியுள்ளவையாக இறுதி செய்யப்பட்டன. இரண்டாவது விமான நிலையம் அமைப்பது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலினுடன், பா.ஜ.,வைச் சேர்ந்த
மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, கடந்த மாதம் இரண்டு முறை பேசினார். அப்போது, 51 சதவீதம் மத்திய அரசு உதவி வழங்குவதாக அவர் தெரிவித்தார்.இந்நிலையில், தன் அமைச்சகத்துக்கு உட்பட்ட, ஆறு துறைகளின் உயரதிகாரிகள் கூட்டத்துக்கு சிந்தியா ஏற்பாடு செய்துள்ளார். வரும் 26ம் தேதி இக்கூட்டம் புதுடில்லியில் நடக்க உள்ளது.
இக்கூட்டத்தில் பங்கேற்க தமிழக அரசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதன்படி தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
அப்போது இரண்டாவது விமான நிலையம் அமைய உள்ள பகுதி எது என்பதை தமிழக அரசு தரப்பில் தெளிவாக தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.மொத்தம், 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைய உள்ள இந்த புதிய விமான நிலையத்துக்கு தேவையான நிதி
ஆதாரங்கள் தொடர்பாக, மத்திய அரசு தரப்பில் சில யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் முதலீட்டு கழகம், வெளிநாட்டு முதலீடு மற்றும் மத்திய நிதியுடன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த விமான நிலையம் அமைந்த பின், முதல் எட்டு ஆண்டுகளில் மட்டும், 1.5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மத்திய அரசு மேற்கொள்ள உள்ள மிகப்பெரிய உள்கட்டமைப்பு திட்டமாக இது அமையும்.'செஸ் ஒலிம்பியாட்' துவக்க விழாவுக்காக, வரும் 28ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம்
வருகை தர உள்ளார். அதற்கு முன்பாக இக்கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.