பிரதமர் போட்டியில் களமாடும் ரிஷி சுனக்பிரதமர் போட்டியில் களமாடும் ரிஷி சுனக்
Rishi Sunak - முன்னணி தொழிலதிபரான நாராயண மூர்த்தியின் மகளான அக்சதா மூர்த்தியை காதலித்து 2009ஆம் ஆண்டில் திருமணம் செய்தார் ரிஷி சுனக்.
பிரிட்டன் நாட்டில் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி நடத்தி வரும் நிலையில், அந்த அரசு தற்போது குழப்பமான சூழலில் உள்ளது. சொந்த கட்சியினரின் கடும் அழுத்தம் காரணமாக பிரிட்டன் நாட்டின் பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் ஜூலை 7ஆம் தேதி ராஜினாமா செய்தார். இந்நிலையில், புதிய பிரதமரை தேர்வு செய்வதில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தீவிர முனைப்பு காட்டி வருகிறது.
புதிய பிரதமர் பதவிக்கான போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் என்பவரும் முன்னணி வேட்பாளராக களம் கண்டுள்ளார். ஒரு வேளை ரிஷி சுனக் வெற்றி பெரும் பட்சத்தில் இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டனில், இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் ஆட்சி செய்கிறார் என்ற பெருமை கிடைக்கும்.
யார் இந்த ரிஷி சுனக்
42 வயதான ரிஷி சுனக் அந்நாட்டின் டோரி என்ற பகுதியில் தற்போது எம்பியாக உள்ளார். இவர் பிரிட்டன் நாட்டின் சவுத்ஹாம்ப்டன் பகுதியில் பிறந்தவர். இவரின் தந்தை அந்நாட்டின் சுகாராத்துறையில் பொது மருத்துவராக பணியாற்றி வருகிறார். தாயார் மருந்து கடை ஒன்றையும் நடத்தி வருகிறார். இவரின் தாத்தா பாட்டி இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். பஞ்சாப்பில் இருந்து அவர்கள் கிழக்கு ஆப்ரிக்கவுக்கு குடிபெயர்ந்த நிலையில், 1960களில் பிரிட்டன் நாட்டிற்கு குடிபெயர்ந்துள்ளனர்.
வின்செஸ்டர் கல்வி நிறுவனத்தில் பள்ளிப்படிப்பை முடித்த ரிஷி சுனக், ஆக்ஸ்போர்டு மற்றும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை முடித்தார். உலகின் முன்னணி நிதி நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ்சில் முன்னணி பொறுப்புகளை வகித்த ரிஷி, முன்னணி தொழிலதிபரான நாராயண மூர்த்தியின் மகளான அக்சதா மூர்த்தியை 2009ஆம் ஆண்டில் திருமணம் செய்தார். இருவரும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் ஒன்றாக படிக்கும் போது காதலித்து பின்னர் மணம் முடித்துக்கொண்டனர். இருவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
ரிஷி சுனக் அரசியல் வாழ்வு
2015ஆம் ஆண்டில் தீவிர அரசியல் களத்தில் குதித்த ரிஷி சுனக் கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு ரிச்மன்ட் பகுதியின் எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். பிரெக்சிட் ஆதரவாளரான இவர், அன்றைய பிரதமர் தெரேசா மேவின் அரசில் அமைச்சாரக பணியாற்றினார். 2019ஆம் ஆண்டு தேர்தலில் போரிஸ் ஜான்சன் பிரதமராக ஆதரவு அளித்து பரப்புரை செய்தார் ரிஷி. தேர்தலில் வென்று போரிஸ் ஜான்சன் பிரதமரான நிலையில், ரிஷி சுனக்கிற்கு நிதித்துறை தலைமை செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
பின்னர் 2020ஆம் ஆண்டில் பிரதமர், துணை பிரதமர் ஆகியோருக்கு அடுத்த அந்தஸ்தில் இருக்கும் அமைச்சரவை பதவி ரிஷி சுனக்கிற்கு வழங்கப்பட்டது. கோவிட் காலத்தில் ரிஷி சுனக் நிதித்துறையில் செய்த நடவடிக்கைகள் அவருக்கு பாராட்டுகளை தந்துள்ளது. அதேவேளை, குறுகிய காலத்திலேயே அரசியலில் இவர் பெரும் வளர்ச்சி பெற்றதற்கும் பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இன்னும் இரண்டு, மூன்று மாதங்களுக்குள் புதிய பிரதமர் தேர்வாகும் நிலையில், பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் ஒருவர் முதல்முதலில் தேர்வாவாரா என்ற எதிர்பார்ப்பு இந்தியர்கள் இடையே எழுந்துள்ளது.