இண்டிகோ' விமானத்தில் கோளாறு; கராச்சியில் அவசரமாக தரையிறக்கம்
18 Jul,2022
வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்சின் ஷார்ஜாவில் இருந்து தெலுங்கானாவின் ஹைதராபாத் நோக்கி, இண்டிகோ நிறுவனத்தின் பயணியர் விமானம் நேற்று காலை வந்து கொண்டிருந்தது. அப்போது, இன்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டறிந்தார். இதையடுத்து விமானத்தை உடனடியாக தரை இறக்க அனுமதி கோரப்பட்டது.பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது. அங்கு பயணியருக்கு காலை உணவு அளிக்கப்பட்ட பின், மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு, நேற்று மதியத்திற்கு மேல் பயணியர், ஹைதரா பாத் அனுப்பி வைக்கப்பட்டனர்.இண்டிகோ நிறுவனத்தின் டில்லி - வதோதரா இடையிலான பயணியர் விமானத்தின் இன்ஜினில் கடந்த 14ம் தேதி கோளாறு கண்டறியப்பட்டு, ஜெய்ப்பூரில் விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது.
இந்த இரு சம்பவங்கள் குறித்தும், டி.ஜி.சி.ஏ., எனப்படும் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் விசாரணை நடத்தி வருகிறது.இண்டிகோ நிறுவனத்தின் போட்டியாளரான, 'ஸ்பைஸ் ஜெட்' நிறுவனத்தின் பயணியர் விமானங்களில், கடந்த மாதம் 19 முதல் இதுவரை, எட்டு முறை தொழில்நுட்ப கோளாறுகள் கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, அந்நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு டி.ஜி.சி.ஏ., 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.
விமானி அறையில் பறவை!
மேற்காசிய நாடான பஹ்ரைனில் இருந்து கேரளாவின் கொச்சி நோக்கி, 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம் கடந்த 15ல் பறந்து கொண்டிருந்தது. விமானம், 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது, விமானத்தை இயக்கும், 'காக்பிட்' பகுதியில், பறவை ஒன்று உயிருடன் இருப்பதை விமானிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். விமானம் கொச்சியில் பத்திரமாக தரை இறக்கப்பட்டது. கோழிக்கோடு - துபாய் இடையே கடந்த 16ல் பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திடீரென தீ கருகும் வாசம் வந்ததை அடுத்து, மேற்காசிய நாடான ஓமன் தலைநகர் மஸ்கட்டில் விமானம் தரை இறக்கப்பட்டது. இந்த இரு சம்பவங்கள் குறித்தும் விசாரணை நடக்கிறது.