வெளியூர் தொழிலாளர்களை பணியமர்த்தும்போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, தொழில் துறையினருக்கு கோவை மாநகர போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.நாட்டின் முன்னணி தொழில் நகரங்களில் ஒன்றான கோவைக்கு வேலை தேடி, பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் வருகின்றனர்.
குறிப்பாக, தங்க நகை உற்பத்தி தொழிலில் மேற்கு வங்க மாநில பொற்கொல்லர்கள், அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர்.ஹோட்டல், கட்டுமானம், மில் தொழில்களிலும், வட மாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கான பேர் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு வந்து வேலை செய்யும் தொழிலாளர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு தப்பி விடும் போது, அவர்களை பிடிப்பது போலீசாருக்கு பெரும் சிரமமாக உள்ளது.
குறிப்பாக, நகை செய்யும் பொற்கொல்லர்கள், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கத்துடன் தப்பி தலைமறைவாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த மாதத்தில் மட்டும், தங்கத்துடன் மேற்கு வங்க பொற்கொல்லர்கள் தப்பி விட்டதாக கோவை மாநகரில் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இத்தகைய நபர்களை பிடிக்க, கோவை போலீசார், மேற்கு வங்கம் சென்றாலும், அந்த மாநில போலீசார் ஒத்துழைப்பதில்லை. இதற்கு தீர்வு காணும் நோக்கத்துடன், போலீசார் நேற்று ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.கமிஷனர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், துணை கமிஷனர் (வடக்கு) மாதவன் தலைமை வகித்தார்.
உதவி கமிஷனர்கள் மணிகண்டன், வீரபாண்டியன் முன்னிலை வகித்தனர். தங்க நகை வியாபாரிகள் சங்கம், தங்க நகை தயாரிப்பாளர் சங்கம், தமிழ் மற்றும் தெலுங்கு விஸ்வகர்மா பொற்கொல்லர் சங்கத்தினர், ஆர்.டி.எம்., விஸ்வகர்மா சங்கம், பெங்காலி அசோசியேசன் (பொற்கொல்லர்கள்), ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் பங்கேற்றனர்.
இதில் பேசிய துணை கமிஷனர் மாதவன், ''இந்த தொழிலில் இருக்கும் சங்கங்கள், நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஆட்கள் பற்றிய முழு விவரங்களையும் அந்தந்த நிறுவனத்தினர் மூலம் சேகரித்து வைத்திருக்க வேண்டும். சங்கத்தினர் வழிகாட்ட வேண்டும்.''ஒரு குற்றச்செயல் நடந்த பிறகு, அதில் தொடர்புடைய நபர் பற்றிய விவரங்களை கேட்டால், எதுவும் இருப்பதில்லை.
வேலைக்கு எடுக்கும்போதே தீர விசாரிக்க வேண்டும்.''இப்போதிருக்கும் தொழிலாளர் பற்றிய முழு விவரங்களையும் சேகரித்து, ஒரு மாதத்தில் ஒப்படைக்க வேண்டும். தொழில் துறையினர் நலனுக்காக, போலீசார் எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு, முழு ஒத்துழைப்பு தர வேண்டும்,'' என்றார்.வெளியூர், வெளிமாநில தொழிலாளர்களிடம் சேகரிக்க வேண்டிய விவரங்கள் பற்றிய பட்டியல், அந்தந்த தொழில் சார்ந்த சங்கத்தினரிடம் வழங்கப்பட்டுள்ளது.