ஆமதாபாத்-குஜராத்தில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கித் தவித்த 31 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுஉள்ளனர்.
குஜராத்தின் தெற்கு மற்றும் சவுராஷ்டிரா பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.கட்ச், நவ்சாரி மற்றும் டாங்க் மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.இங்கு நேற்று காலை 8:00 மணி வரையிலான 24 மணி நேரத்தில், 14 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
இதுவரை 31 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.குஜராத்தின் தெற்கு மற்றும் சவுராஷ்டிரா பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை கொட்டும் என வானிலை மையம் 'ரெட் அலெர்ட்' விடுத்துள்ளது.பரூச் மாவட்டம் வக்ரா தாலுகாவில், நேற்று காலை 6:00 மணி வரையிலான 24 மணி நேரத்தில், 23.3 செ.மீ., மழை கொட்டித் தீர்த்துள்ளது.
அதேபோல், கட்ச் மாவட்டத்தின் அஞ்சாரில் 21.2 செ.மீ., கட்ச்சில் 19.7 செ.மீ., மழை கொட்டியது. மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுஉள்ளனர்.
மஹா.,வில் ஆறு பேர் மாயம்
மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் தொடர் மழை கொட்டுகிறது. இங்கு, திண்டோரி தாலுகாவில் உள்ள ஆலந்தி ஆற்றைக் கடந்த 6 வயது சிறுமி மற்றும் அவரது மாமா இருவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். சிறுமியின் மாமா நீந்தி கரையேறினார். ஆனால் சிறுமியை காணவில்லை.மவுஜே பால்ஷி குர்த் கிராமத்தில், கோதாவரி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில் ஒருவரும், ஷிலாப்பூர் கிராமத்தில் ஒருவரும், சுர்கானா தாலுகாவில் உள்ள நார் ஆற்றைக் கடந்த ஒருவரும் வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டனர். இதேபோல், மோட்டார் பைக்கில் வந்த இருவர், பாலத்தை கடக்கும்போது, ஓடையில் அடித்துச் செல்லப்பட்டனர். அதில் ஒருவர் மட்டும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திரிம்பகேஷ்வரில் உள்ள மவுஜே தலேகான் என்ற இடத்தில் கிக்வி ஆற்றில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார். மாநிலத்தின் பெரும்பாலான அணைகள் திறந்து விடப்பட்டதால், கோதாவரி உட்பட பல ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
தந்தை - மகள் உயிரிழப்பு
மஹாராஷ்டிராவில் கனமழை கொட்டுவதால், பால்கர் மாவட்டத்தின் வசாய் நகரில், நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் இடிபாடுகளில் சிக்கி, அனில் சிங், 45, அவரது மகள் ரோஷ்னி சிங்,16, இருவரும் உயிரிழந்தனர். அனில் மனைவி வந்தனா சிங், 40, மகன் ஓம்சிங்,12, இருவரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.