பிரச்னையில் சிக்கிய விமானங்கள் - ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு நோட்டீஸ்
07 Jul,2022
ஸ்பைஸ்ஜெட் விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் குறித்து விளக்கம் கேட்டு அந்நிறுவனத்துக்கு விமான போக்குவரத்து ஆணையரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது,
ஸ்பைஸ் ஜெட் விமானங்களில் கடந்த மூன்று வாரத்தில் 8 முறை பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. அந்த விமானங்கள் புறப்பட்டு சென்று நடுவானில் கோளாறுகள் கண்டுபிடிக்கப்பட்டு விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்படும் நிலை தொடர்ந்து வருகிறது. டெல்லியில் இருந்து துபாய் சென்ற விமானம் எரிபொருள் கசிவு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கராச்சியில் தரையிறங்கியது.
அதேபோல் கண்ட்லாவில் இருந்து மும்பை சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் முன்பக்க கண்ணாடியில் ஏற்பட்ட விரிசல் காரணமாக மும்பையில் அவசரமாக தரையிறங்கியது. இதேபோல கொல்கத்தாவில் இருந்து சீனா சென்ற சரக்கு விமானம் ரேடார் பழுதானதால் மீண்டும் கொல்கத்தா திரும்பியது. கடந்த 3 வாரங்களில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 8 விமானங்கள் நடுவானில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஒரேநாளில் அந்நிறுவனத்தின் மூன்று விமானங்களில் பிரச்னை ஏற்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து விளக்கம் கேட்டு விமான போக்குவரத்து ஆணையரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.