தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு - முதல்வர் ஸ்டாலின் நடத்தும் ஆலோசனை!
01 Jul,2022
தமிழகத்தில், கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில், கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது. இதனால், கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை அடுத்து, பொது இடங்களில் பொது மக்கள் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, தமிழகத்தில், பல மாதங்களுக்கு பிறகு, கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை இன்று 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 2,069 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் சென்னையில் மட்டும், 909 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. தற்போதைய நிலவரப்படி, மாநிலம் முழுவதும் 11 ஆயிரத்து 94 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருவது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். இந்தக் கூட்டத்தில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் செந்தில் குமார் உள்ளிட்ட மூத்த அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்தக் கூட்டத்தில், கொரோனா தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்தும், கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை துரிதுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது. மேலும், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில், முதற்கட்டமாக, கொரோனா கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்தும் விவாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.