”புல்டோசர் பயங்கரவாதத்தை நிறுத்துங்கள்” - சென்னையில் சமூக செயற்பாட்டாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்
20 Jun,2022
சென்னை: இஸ்லாமியர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிப்பதை நிறுத்த வலியுறுத்தி சமூக செயல்பாட்டாளர்களின் கூட்டியக்கத்தினர் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சர்ச்சைக்குரிய பேச்சுக்களுக்கு பெயர்பெற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாக கருத்துக்களை தெரிவித்தார். அவரை கைது செய்ய வலியுறுத்தி உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத், சஹாரன்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்களை கைது செய்த போலீசார், அங்குள்ள வீடுகளை புல்டோசரை கொண்டு இடித்தனர்.
இதனை கண்டித்து "முஸ்லிம்கள் மீதான புல்டோசர் பயங்கரவாதத்தை நிறுத்துங்கள்" என்ற தலைப்பின் கீழ் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் அரங்கம் அருகே சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மத்திய பாஜக அரசு, யோகி ஆதித்யநாத்தின் உத்தரப்பிரதேச அரசு, போராட்டத்தில் ஈடுபட்ட சிறுவர்களை சுட்டுக்கொன்ற ஜார்க்கண்ட் காவல்துறைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது 2024 நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்களுக்கெதிராக நடைபெறும் கும்பல் படுகொலைகள் உள்ளிட்ட அரச பயங்கரவாத செயல்களுக்கு எதிராக முஸ்லிம் உரிமை பாதுகாப்பு சட்டத்தை MRP Act (Muslim rights Protection Act) கொண்டு வரப்படும் என்ற வாக்குறுதியை காங்கிரஸ் கட்சியினுடைய தேர்தல் அறிக்கையில் இடம்பெற வைக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை சசிகாந்த் செந்திலிடம் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் வழங்கினர்.
இதில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், பேராயர் ஜெகத் கஸ்பர், முன்னாள் வக்பு வாரிய தலைவர் ஹைதர் அலி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னிஅரசு, செய்தி தொடர்பாளர் திரு.விக்கிரமன், பேராசிரியர் சுந்தரவள்ளி, வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டு தங்களின் கண்டனத்தை பதிவு செய்தனர்.