இந்தியாவிற்கான விமான சேவைகளை அதிகரிக்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் திட்டம்
17 Jun,2022
இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதை தொடர்ந்து விமான சேவைகள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளன.
இந்நிலையில் இந்திய சந்தையில் பயண தேவையின் வலுவான அதிகரிப்பு காரணமாக உற்சாகமடைந்து இருக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தற்போது இந்தியாவுக்கான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி தொற்றுக்கு முன்பு இயக்கப்பட்ட விமான எண்ணிக்கையில் சுமார் 75 சதவீத விமானங்களை இந்தியாவிற்கு இயக்கி வருகிறது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) குரூப், முழு சேவை நிறுவனமான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் குறைந்த கட்டண விமான நிறுவனமான ஸ்கூட்டை (Scoot) உள்ளடக்கியது. தற்போது SIA இந்தியா முழுவதும் 13 இடங்களுக்கு விமான சேவைகளை வழங்கி வருகிறது. சமீபத்தில் பேசிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் மூத்த நிர்வாகியான லீ லிக் ஹ்சின் (Lee Lik Hsin), வரும் மாதங்களில் இந்தியாவிற்கு கூடுதல் விமானங்களை இயக்க திட்டமிட்டு உள்ளோம். ஏனென்றால் இந்திய சந்தையும் மிகவும் வலுவாக மீண்டு வருகிறது. அதே போல பயணிகளின் எண்ணிக்கையிலும் தொடர்ந்து அதிகரிப்பு காணப்படுகிறது. அக்டோபரில் இருந்து தொடங்கும் குளிர்கால கால அட்டவணை (winter schedule) அல்லது அடுத்த ஆண்டு அட்டவணை ஆகிய இரண்டில் ஏதாவது ஒரு கால அட்டவணையில் இந்தியாவிற்கான விமானங்களின் அதிகரிப்பை நாங்கள் அறிவிக்கலாம் என்றார். லீ லிக் ஹ்சின் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் வணிக துணைத் தலைவர் ஆவார்.
தற்போது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர், கொல்கத்தா, அகமதாபாத், கொச்சி மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட 8 இந்திய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு 73 வாராந்திர விமானங்களை இயக்குகிறது. அமிர்தசரஸ், கோயம்புத்தூர், ஹைதராபாத், திருச்சி, திருவனந்தபுரம் மற்றும் விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து Scoot சுமார் 38 விமானங்களை இயக்குகிறது. தொற்று காரணமாக சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக இடைநிறுத்தப்பட்ட பிறகு ஷெட்யூல்ட் கமர்ஷியல் இன்டர்நேஷ்னல் பேசஞ்சர் விமானங்கள் இந்த ஆண்டு மார்ச் 27 முதல் இந்தியாவிற்கும், இந்தியாவிலிருந்தும் சிங்கப்பூருக்கும் மீண்டும் தொடங்கப்பட்டன. அப்போதிருந்தே விமான பயணத்திற்கு வலுவான தேவை உள்ளது. இந்தியாவில் இருந்து தற்போதைய வெளிச்செல்லும் விமான போக்குவரத்தில் முதன்மையாக பொழுது போக்கு போக்குவரத்து அதிகம் உள்ளடக்கி இருப்பதாகவும் அதே நேரம் பிசினஸ் டிராவல் தொற்றுக்கு முந்தைய நிலைக்குத் திரும்ப அதிக நேரம் எடுக்கும் என்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறி இருக்கிறார்.
இதனிடையே ஒட்டுமொத்த பயண தேவையைப் பற்றி கருத்து தெரிவித்து இருக்கும் லீ லிக் ஹ்சின், மிக விரைவான மீட்புக் கட்டத்தை இப்போது காண்கிறோம் என்றார். மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த லீ லிக் ஹ்சின், எரிபொருள் விலை உயர்வு என்பது எல்லா விமான நிறுவனங்களுக்குமே கவலையாக உள்ளது என்றார். எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மற்ற அம்சங்களில் எங்களால் முடிந்த அளவு செலவை கட்டுப்படுத்த முயற்சிக்கிறோம். ஆனால் எரிபொருள் விலை என்பது எங்களால் கட்டுப்படுத்த முடியாத ஒன்று என குறிப்பிட்டார். அதிகரித்து வரும் எரிபொருள் விலையை கருத்தில் கொண்டு கட்டணம் உயருமா என்ற கேள்விக்கு பயண கட்டணம் என்பது தேவை மற்றும் விநியோகத்தை பொறுத்தது என்றார்.