சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி ராஜசேகர் என்பவர் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குற்ற வழக்கில் ராஜசேகரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகள் கொடுங்கையூர் காவல் நிலைய போலீசாரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் தற்போது இந்த விசாரணை சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது என்றும், குற்றவியல் நடுவரின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் சென்னை மாநகரக் காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் என்கிற அப்பு. இவருக்கு வயது 30 என்று காவல்துறையின் தரவுகள் கூறுகின்றன. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு வழக்கில் சம்பந்தப்பட்ட ராஜசேகர் என்ற அப்புவை நேற்று இரவு (ஜூன் 11) கொடுங்கையூர் போலீசார் திருவள்ளூரில் வைத்து கைது செய்துள்ளனர்.
இன்று மதியம் காவல்நிலையத்தில் மயக்கமடைந்த அப்பு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என்கிறது காவல்துறை தரப்பு.
தமிழ்நாட்டில் தொடரும் விசாரணைக் கைதிகள் மரணம்
சென்ற ஏப்ரல் மாதம் சென்னை போலீஸ் காவலில் விக்னேஷ் என்ற இளைஞர் உயிரிழந்த விவகாரம் தமிழ்நாடு அளவில் பெரிய சர்ச்சையை உண்டாக்கியது.
ஏப்ரல் 18ஆம் தேதியன்று, சென்னை புரசைவாக்கத்தில் ஆட்டோவில் வந்த விக்னேஷ், சுரேஷ் ஆகிய இருவரும் காவல்துறையால் தாக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதற்குப் பிறகு போலீஸ் காவலில் இருக்கும்போதே விக்னேஷ் மரணமடைந்தார். இந்த நிகழ்வில், விக்னேஷின் குடும்பத்தினர் கடுமையாக மிரட்டப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த விவகாரத்தில் மிகத் தீவிரமான மனித உரிமை மீறல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதற்கு அடுத்த சில நாட்களில் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தட்டரணை கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி என்பவரை, அப்பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபடுவதாக கூறி ஏப்ரல் 26ஆம் தேதி காலை 9 மணி அளவில் திருவண்ணாமலை கலால் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
மலைக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த தங்கமணி விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி ஏப்ரல் 27ஆம் தேதி காலையில் திருவண்ணாமலை கிளைச் சிறையில் தங்கமணி அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் தங்கமணிக்கு வலிப்பு ஏற்பட்டதாக அவரது உறவினருக்கு காவல்துறையினர் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இரவு 9 மணி அளவில் தங்கமணி உயிரிழந்ததாக உறவினர்களுக்கு காவல்துறையினரிடம் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
தங்கமணியை காவல்துறையினர் கடுமையாக தாக்கியதாகவும், அதன் காரணமாகவே அவர் உயிரிழந்ததாகவும் அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர்.