மரணத்திற்கு பிறகு என்ன நடக்கும்னு பார்க்க ஆசைபடுகிறேன் அம்மா... சட்டகல்லூரி மாணவர் தற்கொலை!!
05 Jun,2022
திருநெல்வேலியை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவன் கடிதம் எழுதிவைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான சல்மான் என்ற இளைஞர் சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைகழகத்தில் 2 ஆம் ஆண்டு பயின்று வந்தார். சல்மான் கல்லூரி அருகே தனியார் விடுதி ஒன்றில் தங்கி படித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சல்மான் சொந்த ஊருக்கு சென்று சென்னை திரும்பிய நிலையில் விடுதியில் தான் தங்கியிருந்த அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சால்மானுடன் விடுதியில் வசிக்கும் சக நண்பர்கள் மாணவன் அறைக்கு சென்ற போது சல்மான் தூக்கிட்டபடி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதை அடுத்து சம்பவம் குறித்து அருகில் உள்ள தரமணி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சால்மானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் சல்மான் தற்கொலை செய்து கொண்ட அறையை சோதனை செய்த போது சல்மான் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தது தெரியவந்தது. அந்த கடிதத்தில், மரணத்திற்கு பிறகு என்ன நடக்கும் என்பதை நான் தெரிந்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்.
நான் சேமித்து வைத்திருந்த 5000 ரூபாய் பணம் எனது அம்மாவிற்காக வைத்துள்ளேன் என்று எழுதியிருந்தார். அவரது இந்த கடிதம் தனது தாய் மீதுள்ள பாசத்தை வெளிக்காட்டும் வகையில் இருந்தது. இந்த உருக்கமான கடிதம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது. இதனிடையே சட்ட கல்லூரி மாணவன் சல்மான் தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பல்வேறு கோணைங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சட்டக் கல்லூரி மாணவன் கடிதம் எழுதிவைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.