துறைமுகத்தில் இருந்து சொகுசு கப்பல் சுற்றுலாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மும்பை, கோவா போன்ற சில கடலோர பெருநகரங்களில் மட்டுமே சொகுசு கப்பல்சுற்றுலா பயணம் இருந்து வந்தது. சொகுசு கப்பல் பயண சேவை உலக வரைபடத்தில் முக்கியமான கடற்கரையை தன்னகத்தே கொண்டுள்ள சென்னையிலும், இதுபோல சொகுசு கப்பல் பயண சேவை தொடங்கப்படுமா? என்று தமிழக மக்கள்
நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த எதிர்பார்ப்பை ஈடுசெய்யும் வகையிலும், தமிழக மக்களின் கனவை நனவாக்கும் வகையிலும் சென்னையில் சொகுசு கப்பல் பயணம் இப்போது சாத்தியமாகி இருக்கிறது. தமிழக மக்களுக்கு சொகுசு கப்பலின் புதிய அனுபவத்தையும், திகில் நிறைந்த ஆழ்கடல் பயண அனுபவத்தையும் அளிக்கும் வகையில் தமிழக அரசின் சுற்றுலாத்துறை ஏற்பாட்டில் 'கார்டிலியா குருயிசஸ்' என்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் அதன்படி, சென்னை துறைமுகத்தில் இருந்து 'எம்பிரஸ்' எனும் சொகுசு கப்பலை அறிமுகம் செய்து, அதை மக்களின் சொகுசு சுற்றுலா பயணத்துக்காக தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இந்த சொகுசு கப்பல் பயன்பாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துறைமுகத்தில் நேற்று தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் கப்பலில் ஏறி, அதில் உள்ள அம்சங்களை நேரில் பார்வையிட்டார். கேப்டன் டேனிஸ் கொரூப் கப்பலில் உள்ள நவீன மற்றும் சொகுசு வசதிகள் குறித்து முதல்-அமைச்சரிடம் விளக்கி கூறினார்.
அப்போது சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், தயாநிதிமாறன் எம்.பி., சுற்றுலா பண்பாடு - அறநிலையத்துறை முதன்மை செயலாளர் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கழக தலைவர் டாக்டர் பி.சந்திரமோகன்,
சென்னை துறைமுக பொறுப்பு கழக தலைவர் சுனில் பாலிவால், சுற்றுலா - தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்தூரி, கார்டிலியா குருசஸ் நிறுவன முதன்மை செயல் அதிகாரி ஜர்கன் பைலாம், முதன்மை செயல்பாட்டு அதிகாரி ஓனில் வர்மா, மண்டல மேலாளர் திலிப் வாசுதேவ், முதுநிலை மேலாளர் மொகிசின் ஆகியோர் உடன் இருந்தனர். என்னென்ன வசதிகள் உள்ளன? 5 நட்சத்திர ஓட்டல் போன்ற வசதிகளை உள்ளடக்கிய இந்த சொகுசு கப்பல் 700 அடி நீளம் கொண்டது. அடுக்கடுக்காக 11 தளங்களை கொண்ட இந்த கப்பலில் மொத்தம் 796 அறைகள் இருக்கின்றன. ஒரே நேரத்தில் 1,000 பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கும் வகையில் பிரமாண்டமான கலையரங்கம் உள்ளது. மேலும் 4 பெரிய உணவகங்கள், மதுக்கூடம் (பார்), உடற்பயிற்சி கூடம் (ஜிம்), சினிமா தியேட்டர்கள், ஸ்பா, மசாஜ் சென்டர், யோகாசனம் செய்யும் இடம், நீச்சல் குளம், கேசினோ (சூதாட்ட கிளப்புகள்), நூலகம், குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி,
கப்பலின் ஓரம் அமர்ந்து கடல் அழகை கண்டுகளிக்கும் கூடம் என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்துள்ளன.
- சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 8-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் ரூ.40 ஆயிரம் கட்டணம் நவீன வசதிகளை உள்ளடக்கிய இந்த 'எம்பிரஸ்' கப்பலில் பயணிப்பதற்கான கட்டணமாக குறைந்தபட்சம் ரூ.40 ஆயிரம் (2 பேருக்கு) என்றும், அதிகபட்சமாக ரூ.1ண லட்சம் என்றும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த கட்டணத்துக்குள்ளேயே உணவும், தங்கும் செலவும் அடங்கும். மேலும் 2 நாட்கள், 3 நாட்கள், 5 நாட்கள் என 'பேக்கேஜ்' அடிப்படையிலும் சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறது. ஒளிவெள்ளம்
இந்த 'எம்பிரஸ்' சொகுசு கப்பல் நேற்று இரவு 8 மணி அளவில் தனது பயணத்தை தொடங்கியது. இரவில் ஒளிவெள்ளத்தில் மிதந்து செல்லும் அழகு கண்களுக்கு ரம்மியமாக இருந்தது. அதாவது கடற்கரையோரம் இருந்து பார்க்கும்போது ஒரு குட்டி நகரமே ஜொலித்தபடி மிதந்து செல்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. மேலும் கப்பலில் ஆடல்-பாடல் போன்ற கலைநிகழ்ச்சிகள் மற்றும் கலாசார நிகழ்வுகள் என களைகட்டிய பயணத்துடன் கப்பல் புறப்பட்டது. இந்த கப்பலில் அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், சுற்றுலா பண்பாடு-அறநிலையத்துறை முதன்மை செயலாளர் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கழக தலைவர் டாக்டர் பி.சந்திரமோகன், சுற்றுலா-தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோரும் பயணம் செய்தனர்.
கலைநிகழ்ச்சிகள் இதுகுறித்து சுற்றுலா வளர்ச்சிக்கழக தலைவர் டாக்டர் பி.சந்திரமோகன் கூறியதாவது:- 'எம்பிரஸ்' சொகுசு கப்பல் பயண திட்டம் 5 நாட்கள் கொண்டதாகும். அதன்படி, இன்று (நேற்று) புறப்பட்ட இந்த கப்பல் ஆழ்கடல் பகுதிகளுக்கு செல்கிறது. ஆழ்கடலில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்படுகிறது. கப்பலில் பார்வையாளர்களை மகிழ்விக்க கலைநிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படுகின்றன. நாளை (இன்று) காலை கப்பல் மீண்டும் புறப்பட்டு ஆழ்கடலில் சிறிது தூரம் சென்று,
அன்று இரவும் கப்பல் ஆழ்கடலிலேயே நிறுத்தப்படுகிறது. பின்னர் திங்கட்கிழமை காலை கப்பல் மீண்டும் சென்னை துறைமுகத்துக்கு வருகிறது. பின்னர் அன்று மாலை கப்பல் விசாகப்பட்டினம் செல்கிறது. காலையில் செல்லும் இந்த கப்பல் மாலை வரை அங்கேயே நிறுத்தப்படுகிறது. பின்னர் மாலையில் அங்கிருந்து புறப்படும் கப்பல் புதுச்சேரி நோக்கி புறப்படுகிறது. புதுச்சேரி ஆழ்கடல் எல்லையை சுற்றிபார்த்துவிட்டு, மறுநாள் காலை அங்கே நிறுத்தப்படுகிறது. பின்னர் மாலையில் அங்கிருந்து இயக்கப்படும் இந்த கப்பல் ஆழ்கடல் எல்லை வழியாக மீண்டும் சென்னை வந்தடைகிறது.
இந்த சுற்றுலா பயணத்தில் விசாகப்பட்டினம், புதுச்சேரியில் கப்பல் நிறுத்தப்படும்போது அங்கே உள்ள நகரை பயணிகள் சுற்றி பார்க்கலாம்.
சுழற்சியாக பயணம் இந்த 5 நாட்கள் பயண திட்டம் முடிவுற்றதும் அடுத்த 5 நாட்கள் பயணம் தொடங்குகிறது. அதாவது அடுத்து வரும் சனிக்கிழமை இரவு இதேபோல 5 நாள் சுற்றுலா பயணம் தொடங்குகிறது. இது சுழற்சியாக நடந்துகொண்டே இருக்கும். முதல் தடவை வாய்ப்பு கிடைக்காத பயணிகள் மறுவாரத்தில் தங்களது விருப்பத்தை நிறைவேற்றி கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். சர்வதேச கப்பல்கள் சென்னை துறைமுக பொறுப்பு கழக தலைவர் சுனில் பாலிவால் கூறுகையில்,
''இந்தியாவில் உள்ள பெரிய சொகுசு கப்பல்களில் இதுவும் ஒன்று. வருகிற செப்டம்பர் 23-ந் தேதி வரை சென்னையில் இருந்து ஆழ்கடல் சுற்றுலா, விசாகப்பட்டினம், புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு சுற்றுலா செல்லும் வகையில் 2 இரவு சுற்றுலா திட்டம், 5 இரவுகள் சுற்றுலா திட்டம் உள்ளது. அத்துடன் விசாகப்பட்டினம்-சென்னை-புதுச்சேரி செல்லும் வகையில் சுற்றுலா திட்டத்திற்கு தற்போது ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இலங்கையில் சூழல் சரியானதும் கொழும்பு வரை இயக்கவும் வாய்ப்பு உள்ளது. இதுதவிர சர்வதேச கப்பல்கள் சென்னை வருவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்றார்.