மின் கட்டண விகிதம் மாற்றம்; இணையதள வசதி நாளை அறிமுகம்
31 May,2022
மின் கட்டண விகிதம் மாற்றம் செய்வதற்கு, இணையதளத்தில் விண்ணப்பிக்கும் சேவையை, தமிழக மின் வாரியம், நாளை முதல் அமல்படுத்துகிறது.தமிழக மின் வாரியம், வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள் போன்றவற்றுக்கு தாழ்வழுத்த பிரிவிலும்; பெரிய தொழிற்சாலைகளுக்கு உயரழுத்த பிரிவிலும் மின் இணைப்பு வழங்குகிறது. தாழ்வழுத்த பிரிவில் உள்ள ஒவ்வொரு வகைக்கும் தனித்தனி விகிதங்களில், மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
எனவே, ஏற்கனவே மின் இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்கள், ஒரு மின் கட்டண விகிதத்தில் இருந்து, மற்றொரு கட்டண விகிதத்திற்கு மாற, மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் விண்ணப்பம் அளிக்க வேண்டும். அதில், நடவடிக்கை எடுப்பதில் தாமதம் செய்யப்படுவதாக புகார்கள் எழுகின்றன.எனவே, தாழ்வழுத்த பிரிவு நுகர்வோர்கள், மின் கட்டணம் மாற்றம் செய்வதற்கான விண்ணப்பத்தை, www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் மட்டும் விண்ணப்பிக்கும் சேவையை, ஜூன் 1 முதல் செயல்படுத்த, மின் வாரியம் முடிவு செய்துஉள்ளது.
இதற்கான மென்பொருள் உருவாக்குதல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளன. இதையடுத்து, நாளை முதல் மின் கட்டண விகிதம் மாற்றம் செய்வதற்கு, இணையதளத்தில் விண்ணப்பிக்கும் சேவை அமலுக்கு வருகிறது.இந்த சேவையை பெற, மின் இணைப்பு யார் பெயரில் உள்ளதோ, அவரின், 'ஆதார்' கார்டை பதிவேற்றம் செய்து, விபரங்களை பதிவு செய்ய வேண்டும். அதை பொறியாளர்கள், இணையதளம் வாயிலாகவே பரிசீலித்து, ஒப்புதல் அளிப்பர்.புதிய மின் இணைப்பு, கூடுதல் மின் பளு, தற்காலிக மின் இணைப்பு, மின் இணைப்பு பெயர் மாற்றம் ஆகிய சேவைகளுக்கு, இணையதளத்தில் மட்டும் விண்ணப்பிக்கும் சேவை, ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது.