100 பேரின் வங்கிக்கணக்கில் ரூ.13 கோடி வரவு! வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி
29 May,2022
சென்னை தி.நகர் பர்கிட் சாலையில் உள்ள எச்.டி.எப்.சி., வங்கி கிளையில் இருந்து 100 வங்கிக்கணக்குகளுக்கு தலா ரூ.13 கோடி பணம் வரவு வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதிய மென்பொருளை நிறுவிய போது ஏற்பட்ட குளறுபடியே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
சென்னை தி.நகரில் உள்ள எச்.டி.எப்.சி., வங்கியின் வாடிக்கையாளர்கள் 100 பேர் கணக்கில் ரூ.13 கோடி வரவு வைக்கப்பட்டதாக, சம்பந்தப்பட்டவர்களுக்கு குறுஞ்செய்தி சென்றது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உடனடியாக குறிப்பிட்ட 100 வங்கிக்கணக்கை அதிகாரிகள் தற்காலிகமாக முடக்கி விசாரணை நடத்தினர். தொழில் நுட்ப கோளாறு காரணமாக பணம் தவறுதலாக வரவு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
இதனிடையே, வங்கி சர்வரில் புதிய மென்பொருளை நிறுவியதே குளறுபடிக்கு காரணம் என தகவல் தெரியவந்துள்ளது. வாடிக்கையாளர்களின் பக்கத்தில் சில தகவல்களை அப்டேட் செய்யும் போது, வரவு பக்கத்தில் குழப்பம் ஏற்பட்டு பணம் வரவு வைக்கப்பட்டதாகவும், சில கிளைகளில் இதுபோன்ற குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் சரியாகும் என வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.