பாலியல் தொழில் : ‘வயதுவந்த, சுய ஒப்புதலோடு இதில் ஈடுபடுவோர் மீது குற்ற நடவடிக்கை கூடாது இந்திய உச்ச நீதிமன்றம்
28 May,2022
வயதுவந்த, சுய ஒப்புதலோடு பாலியல் தொழிலில் ஈடுபடுவோர் விஷயத்தில் போலீஸ் தலையிடவோ, அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கவோ கூடாது, அவர்கள் கண்ணியத்தோடு நடத்தப்படவேண்டும் குற்றவாளிகளைப் போல நடத்தப்படக்கூடாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
2011ம் ஆண்டு கொல்கத்தாவில் பாலியல் தொழிலாளி ஒருவர் மீது வழக்குத் தொடரப்பட்டதை தாமாக முன்வந்து கவனத்தில் எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபன்னா அடங்கிய ஆயம், இந்த உத்தரவை மே 19-ம் தேதி பிறப்பித்துள்ளது.
பாலியல் தொழிலாளிகள் தொடர்பில் இதுபோன்ற ஒரு உத்தரவை உச்ச நீதிமன்றம் முதல் முறையாகப் பிறப்பித்துள்ளது என்கிறார், இந்த வழக்கில் தொர்புடைய தர்பார் மகிளா சமன்வய கமிட்டி சார்பில் வாதிட்ட மூத்த வழக்குரைஞர் ஆனந்த் குரோவர்.
“உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பாலியல் தொழிலாளிகள் சமூகத்துக்கு நல்ல செய்தியை அளித்துள்ளது. இனி பாலியல் தொழிலாளிகள் கண்ணியத்தோடு நடத்தப்படவேண்டும். அவர்கள் குற்றவாளிகளைப் போலவோ, அவர்கள் குடிமக்களே அல்ல என்பதைப் போலவோ நடத்தப்படக்கூடாது. ரேஷன் அட்டை, ஆதார் போன்ற அடையாள அட்டைகள் பெறுவது அவர்கள் உரிமை என வரையறுக்கப்பட்டுள்ளது,” என்கிறார் அவர்.
ஒரு ரெய்டு நடத்தும்போது பாலியல் தொழிலாளிகள் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தால், அவர்கள் சுய விருப்பத்தோடு அதில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தால் அவர்களை போலீசார் அவர்களை கைது செய்யக்கூடாது என்று உத்தரவில் கூறப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார் குரோவர்.
ஆனால், பாலியல் தொழிலாளிகளின் வேலையை ஒரு தொழிலாக அங்கீகரிக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் எதையும் கூறவில்லை என்பதையும் குரோவர் தெளிவுபடுத்துகிறார்.
பாலியல் தொழிலாளிகளை இந்தியாவில் கண்ணியத்தோடு நடத்துவது தொடர்பான பிரச்னையில் உச்ச நீதிமன்றம் இத்தகைய ஆணை ஒன்றைப் பிறப்பித்திருப்பது மிக நல்லது என பிபிசியிடம் கூறினார், மற்றொரு பிரபல உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் காமினி ஜெய்ஸ்வால். “அவர்களை எப்போதும் குற்றவாளிகளைப் போல நடத்திக்கொண்டிருக்க முடியாது.
அவர்களும் மனிதர்கள்தான். அவர்கள் கண்ணியத்தோடு நடத்தப்படவேண்டும் என்பது மிக நல்ல விஷயம். அவர்களுக்கு செய்வதற்கு வேறு ஏதும் இல்லை என்பதால்தான் இதையெல்லாம் செய்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்,” என்று கூறினார்.