தலைகுனிவை ஏற்படுத்தும் செயல்களை காவல்துறையினர் செய்துவிடக் கூடாது.. முதல்வர்
28 May,2022
குற்றங்கள் எந்த சூழ்நிலையிலும் உருவாகாத நிலையை காவல்துறை ஏற்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் குடியரசுத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் 2019 முதல் 2021ஆம் ஆண்டு வரையில் பதக்கங்களை பெற்ற 319 காவல்துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கங்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, மக்களின் காவலர்களாக இருந்து சிறந்து விளங்குவோரை பாராட்டுகிறேன். காவல்துறை நம் நண்பன் என மக்கள் சொல்லும் அளவிற்கு செயல்பட வேண்டும். தலைகுனிவை ஏற்படுத்தும் செயல்களை காவல்துறையினர் செய்துவிடக் கூடாது.
திட்டமிட்டு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயல்பவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் மக்களுக்கு அச்சம் தரும் சம்பவங்கள் நிகழாமல் காவல்துறை பார்த்துக்கொள்ள வேண்டும். குற்றங்கள் எந்த சூழ்நிலையிலும் உருவாகாத நிலையை காவல்துறை ஏற்படுத்த வேண்டும். தமிழக அரசின் ஒரு கை நிர்வாகம் என்றால், மற்றொரு கை காவல்துறை.
காவல்துறை மக்களுடன் நெருக்கமாக இருந்தால்தான் குற்றங்கள் குறையும். எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக திராவிட மாடல் ஆட்சியை தமிழகத்தில் வழங்கி வருகிறோம். அமைதியான சூழ்நிலையில்தான் தொழில் வளர்ச்சி ஏற்படும். தமிழகம் அமைதி பூங்காவா இருப்பதால்தான் தொழில்துறையினர் வருகின்றனர். போதைப் பொருள்கள் நடமாட்டம் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.