சிங்கப்பூருக்கு சுற்றுலா செல்வதில் முதலிடம் வகிக்கும் இந்தியர்கள்!
24 May,2022
சிங்கப்பூருக்கு அதிக எண்ணிக்கையில் சுற்றுலா செல்லும் இந்தியர்கள்சிங்கப்பூருக்கு அதிக எண்ணிக்கையில் சுற்றுலா செல்லும் இந்தியர்கள்
ஜனவரி முதல் ஏப்ரல் காலகட்டத்தில் 95 ஆயிரம் இந்தியர்கள் சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
கோவிட் பெருந்தொற்று காரணமாக பெரும் பாதிப்பை கண்ட துறைகளில் பிரதானமானது சுற்றுலாத் துறை. லாக்டவுன் அறிவிப்பு காரணமாக மக்களின் அன்றாட போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், சுற்றுலாத்துறை முற்றிலும் அடிவாங்கியது.
சொல்லப்போனால், 2 ஆண்டுகள் சுற்றுலாத்துறை முடங்கியதால் இலங்கை பெரும் பொருளாதார வீழ்ச்சி கண்டு அதில் இருந்து மீள முடியாத நிலையில் உள்ளது. இந்நிலையில் சுற்றுலாவை முக்கியமாக நம்பியுள்ள நாடான சிங்கப்பூர் மீண்டும் புத்துணர்ச்சியை கண்டுள்ளது. கோவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு அங்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், அந்நாடு மீண்டும் தனது பொலிவை பெற்றுவருகிறது. இதற்கு இந்தியாவின் பங்களிப்பே அதிகம் என புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் மார்ச் மாதம் 1 லட்சத்து 21 ஆயிரத்து 200 சுற்றுலா பயணிகள் வந்த நிலையில், ஏப்ரல் மாதம் இந்த எண்ணிக்கை 2 லட்சத்து 94 ஆயிரத்து 200ஆக உயர்ந்துள்ளது. அந்நாட்டின் சராசரியான 16 லட்சம் சுற்றுலா பயணிகள் என்பதை காட்டிலும் இது மிகக் குறைவே. இருப்பினும், கோவிட் தாக்கத்திற்குப் பின் ஏப்ரல் மாத எண்ணிக்கை அந்நாட்டிற்கு நம்பிக்கை அளிக்கும் அம்சமாக உள்ளது. சிங்கப்பூர் சென்றுள்ள சுற்றுலா பயணிகளில் இந்தியர்களே முதலிடம் பெற்றுள்ளனர். ஜனவரி முதல் ஏப்ரல் காலகட்டத்தில் 95 ஆயிரம் இந்தியர்கள் சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அடுத்தபடியாக 89,700 இந்தோனேசியர்களும், 45,600 மலேசியர்களும் சிங்கப்பூர் சுற்றுலா சென்றுள்ளனர்.
சிங்கப்பூருக்கு அதிகம் சுற்றுலா பயணிகள் சீனாவில் இருந்து தான் வருவார்கள்.ஆனால், கடந்த இரு மாதங்களாக சீனாவில் கோவிட் ஓமிக்ரான் பாதிப்பு பரவல் காரணமாக முழு முடக்கம் உள்ளதால் சீனாவின் பங்களிப்பு தற்போது இல்லை. இதை சரிக்கட்டும் விதமாக இந்தியா சுற்றுலா பயணிகள் சிங்கப்பூர் சுற்றுலாத்துறைக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.