தனுஷ்கோடியில் 58 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய தரைப்பாலம் வெளியே தெரிந்தது.!
23 May,2022
ராமேசுவரத்தில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தனுஷ்கோடி பகுதி. அதுபோல் 1,964-ம் ஆண்டுக்கு முன்பு வரையிலும் ராமேசுவரத்தை விட தனுஷ்கோடி மிகப்பெரிய தொழில் நகரமாக விளங்கி உள்ளது. தனுஷ்கோடியில் இருந்து இலங்கையின் தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்து மற்றும் தனுஷ்கோடி வரை ரெயில் போக்குவரத்தும் இருந்துள்ளது. மேலும் பள்ளிக்கூடம், தபால் நிலையம், மருத்துவமனை, கோவில்கள், துறைமுகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அது மிகப்பெரிய தொழில் நகரமாக விளங்கியது. கடந்த 1964-ம் ஆண்டு டிசம்பர் 23-ந்தேதி அன்று ஏற்பட்ட புயல் காரணமாக தனுஷ்கோடி நகரமே முழுமையாக அழிந்து போனது. புயல் ஏற்பட்ட பிறகு தனுஷ்கோடியில் பொதுமக்கள் வாழ்வதற்கும் அரசால் தடை விதிக்கப்பட்டது. ஆனால் தனுஷ்கோடி பகுதியில் இன்று வரையிலும் மீன்பிடித் தொழிலை நம்பி வாழும் ஏராளமான மீனவர்கள் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தனுஷ்கோடி பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகவே வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசுவதுடன் கடல் சீற்றம் அதிகரித்து காணப்பட்டு வருகின்றது. ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டு வருவதால் எம்.ஆர்.சத்திரம் பகுதியில் இருந்து அரிச்சல்முனை வரையிலான இடைப்பட்ட கடற்கரை பகுதி முழுவதும் கடல் அரிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனிடையே தனுஷ்கோடி பகுதியில் ஏற்பட்டுள்ள தொடர் கடல் சீற்றத்தால் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பு காரணமாக 1964-ம் ஆண்டுகளுக்கு முன்பு புயலில் கடலில் மூழ்கிப்போன தரைப்பாலம் ஒன்று தற்போது தெளிவாக வெளியே தெரிகிறது. இந்த பாலமானது பார்ப்பதற்கு கான்கிரீட் குழாய்கள் அமைத்து அதன்மீது தளம் அமைத்து தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளதாகவும், கடற்கரை பகுதியில் பதிக்கப்பட்டுள்ள இந்த கான்கிரீட்குழாய்கள் வழியாக தெற்குப் பகுதியிலிருந்து கடல் நீரானது வடக்கு பகுதிக்கும், வடக்கு கடல் பகுதியில் உள்ள கடல் நீரானது கடலிலும் தென் கடல் பகுதிக்கும் சேரும் வகையிலும் இந்த தரைப் பாலம் அமைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 58 ஆண்டுகளுக்கு முன்பு புயலால் கடலில் மூழ்கிப்போன கான்கிரீட் குழாய்களுடன் கூடிய தரைப்பாலம் தற்போது தெளிவாக வெளியே தெரிவதை தனுஷ்கோடி வரும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஆச்சரியத்தோடு பார்த்து செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.