காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாதயாத்திரை செல்லும் ராகுல்காந்தி
15 May,2022
இன்னும் இரண்டே ஆண்டுகளில் நாடு அடுத்த நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறது. அதை எதிர்கொள்வதற்கும், தொடர் தோல்விகளால் துவண்டு போய் உள்ள கட்சிக்கு புத்துயிரூட்டவும் ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூரில் காங்கிரஸ் 3 நாள் சிந்தனை அமர்வு மாநாட்டினை ‘நவ் சங்கல்ப் சிந்தன் ஷிவிர்’ என்ற பெயரில் நடத்தி வருகிறது.
இந்த மாநாட்டின் 2-வது நாளான நேற்று, பெருகிவரும் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் மத்திய அரசின் தவறான கொள்கைகள் குறித்து அடுத்த கட்ட போராட்டம் நடத்தி மக்களிடம் எடுத்துச்செல்வதற்கான வழிவகைகள் குறித்து ஆராயும் முக்கிய அமர்வு நடந்தது.
கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்த இந்த அமர்வில் கட்சி பொதுச்செயலாளர்கள், மாநில காங்கிரஸ் தலைவர்கள், பல்வேறு மாநில சட்டசபை காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்தநிலையில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாடு முழுவதும் பாதயாத்திரை மேற்கொள்ள ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கட்சியை பலப்படுத்த முழுவீச்சில் களமிறங்குகிறார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் அரசு ஊழியர் ராகுல்பட் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து மத்திய அரசை ராகுல்காந்தி கடுமையாக சாடி உள்ளார்.
இது தொடர்பான வீடியோவை தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல், காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்பட பற்றி பிரதமர் மோடி பேசுவதை விட, இந்த வீடியோவிற்கு பதில் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.