(மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் பன்னிரெண்டாம் கட்டுரை இது. இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்)
உலகெங்கும் கொரோனா தாக்கத்தால் குறைந்திருந்த தொழில் முனைவுகள் தற்போது மீண்டும் அதிகரித்து வரும் சூழ்நிலையில், இந்தியாவில் இருக்கும் வேலைவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளும் அளவுக்கு தகுதியான பணியாட்கள் கிடைப்பதில் பற்றாற்குறை இருப்பதாக பல்வேறு நிறுவனங்களும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.
இந்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் 2019ல் வெளியிட்ட அறிக்கையில், நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் படித்து வெளியேறும் மாணவர்களில் 80% பேர் வேலையில்லாமல் இருப்பதாக தெரிவித்துள்ளது.
அதே சமயம் இந்தியாவில் உள்ள மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் மொத்தமுள்ள இடங்களில் பாதி இடங்களுக்கு சேர்க்கையில்லை என்று தெரிவிக்கிறது பத்திரிக்கை செய்திகள். ஆனால் அதே சமயம் தங்களது வேலைக்கு சரியான ஆட்கள் இல்லை என்று நிறுவனங்களும் கூறிவருகின்றன.
உண்மையில் என்னதான் நடக்கிறது?
2003 முதல் 2015ஆம் ஆண்டு வரை இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ந்து பல்வேறு வகையான வேலை வாய்ப்புகளை உருவாக்கியது. அதனால் தேவைக்கு அதிகமான கல்லூரிகள் உருவாகி தரமில்லாத கல்வியால் தேவைக்கு அதிகமான பொறியாளர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர் என்ற வாதத்தை முன்வைக்கின்றனர் ஒரு தரப்பினர். சரி, நாம் பழங்கதை பேச வேண்டாம், என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.
நம் கண் முன்னே உருவாகி வரும் வாய்ப்புகள் என்ன? இருக்கின்ற கல்லூரிகளையும், கல்லூரியில் படிக்கும் மாணவர்களை வைத்து நம் தொழிற்துறைகளை எப்படி மேம்படுத்தலாம் என்பது பற்றி இந்த கட்டுரையில் விரிவாகப் பார்பதற்கு முன்னதாக மற்றொரு முக்கியமான விடயத்தை நாம் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
எண்ணிமப் பொருளாதாரம்
உலகில் இனி எண்ணிமப் பொருளாதாரம் (Digital Economy) தான் அதிகமாகும் என்ற நிலையில் இதுவரை பல ஆண்டுகளாக இந்தியா கோலோச்சிவருகிறது. உலக நாடுகளின் வருமானத்தில் இனி எண்ணிமப் பொருளாதாரம் (Digital Economy) தான் முக்கியம் என்ற நிலை விரைவில் வரும். ஆனால் இப்போது வரை இந்தியாதான் எண்ணிமப்பொருளாதாரத்தில் முன்னணியில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கத்திய நாடுகள் தங்கள் பணிவாய்ப்புகளை ஒப்படைக்கும் நாடாக இந்தியா இருந்து வருகிறது. அதனால், இங்கு பல விதமான வேலைவாய்ப்புகள் உருவாயின. இந்த வேலைவாய்ப்பினால் ஏற்படும் பண வாய்ப்புகளையே இங்கே எண்ணிமப் பொருளாதாரம் என்கிறோம்.
ஆனால் இந்தியாவை போல பிற நாடுகளும் எண்ணிமப் பொருளாதாரத்தை இலக்காக வைத்து இயங்குகின்றன.
இந்த துறையில், உலகப் பொருளாதார மன்றத்தின் 2019 கணக்கெடுப்பின் படி, இந்தியா முதலிடம் என்றாலும் உலக அளவில் வேலைக்கு ஏற்ற நபர்களைக் கொடுப்பதில் நமது அண்டை நாடான வங்கதேசம் இப்போது இரண்டாம் இடத்தில் உள்ளது என்பதை ஆச்சர்யத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. வங்கதேசத்தின் ICT துறை அறிக்கையின் படி, அந்த நாடு எண்ணிம பொருளாதாரத்தின் மூலம் ஆண்டுக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டுகிறது. 5 பில்லியன் இலக்கினை நிர்ணயித்து வேலை பார்த்துவருகிறது. உலக எண்ணிம வேலை வாய்ப்புச் சந்தைக்கு பணியாட்களை கொடுப்பதில் தோராயமாக 100 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் பங்கு 24.6%, ஆனால் 16 கோடி மக்கள் தொகை வங்கதேசத்தின் பங்கு 16.8% ஆக உள்ளது. அதற்கடுத்தடுத்த இடங்களில் உள்ள அமெரிக்கா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவை நோக்கி பின்தொடர்ந்து வருகின்றன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
நிலைமை இப்படியிருக்க நமது கல்வியின் தரம் குறைந்துபோனால் இது போன்ற பணி வாய்ப்புகள் நமக்கு கிடைக்காமல் போகும். அப்படி குறைந்துபோனால் வேலைவாய்ப்பும் குறையும், அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் வேலைவாய்ப்பு இல்லாமல் போனால் என்னாகும் என்பதும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய எச்சரிக்கை.
உண்மையில் இந்திய வேலைவாய்ப்பு சந்தையில் திறமைக்கான பஞ்சம் நிலவுகிறதா என்று சென்னையை சேர்ந்த தொழில் முனைவோரான ஏ.ஜே.பாலசுப்பிரமணியனிடம் பேசியபோது, "கணினித்துறையில் புதிதாக பணிக்கு சேருபவர்கள் கணிப்பொறியியலில் பட்டப்படிப்பு படித்திருந்தாலும் அவர்களுக்கு நிரலாக்கம் மற்றும் அதன் அடிப்படைகள் முழுவதுமாக தெரிவதில்லை. நிரலாக்கம் செய்ய கணிதத்தின் அடிப்படை மற்றும் தர்க்க முறைகள் பற்றி முழுதாக பாடத்திட்டத்தில் புரிந்துகொள்ள இயலாத நிலை இருக்கிறது. மேலும், ஆசிரியர்கள் பாடத்தை புரிந்துகொள்ளத்தக்க வகையில் பயிற்றுவிப்பதும், அதை மாணவர்கள் ஆர்வத்துடன் கற்றுக்கொள்வதும் அவசியமாக உள்ளது. ஆனால், இந்த நடைமுறையில் சிக்கல் உள்ளதே பிரச்னைக்கு காரணமாக கருதுகிறேன்" என்று கூறுகிறார்.
இதுபோன்ற நிலையில், கல்வித் தரத்தினை உயர்த்தவும் மாணவர்களுக்கு ஏட்டு கல்வியுடன் செயல்முறை கல்வியும் அவசியம் என்றும் குறிப்பாக பட்டப்படிப்பு இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் கட்டாயம் ஒரு நிறுவனத்தில் ஒரு வருடமாவது இன்டெர்ன்ஷிப் போன்று பணி அனுபவம் பெற்றே ஆகவேண்டும் என்றும் பலராலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பேசிய ஏ.ஜே.பாலசுப்பிரமணியன், "மாணவர்களுக்கு இறுதியாண்டு படிப்புக்கு பிறகு ஓராண்டு இன்டெர்ன்ஷிப் என்பது வரவேற்கத்தக்க கருத்து. இது நடைமுறைக்கு வந்தால் மாணவர்களை வேலைவாய்ப்பு சந்தைக்கேற்ற திறனுள்ளவர்களாக மாற்றவியலும். எனவே இது நல்ல திட்டம்தான், இதன் மூலம் வேலைக்கு தகுதியானவர்கள் கிடைக்கவில்லை என்ற பிரச்னையை ஓரளவுக்கு தீர்க்க முடியும்" என்று கூறுகிறார்.
மாணவர்களுக்கு இறுதியாண்டு படிப்புக்கு பிறகு ஓராண்டு இன்டெர்ன்ஷிப் என்பது வரவேற்கத்தக்க கருத்து
ஆனால், மாணவர்கள் இன்டெர்ன்ஷிப் செய்யும் நிறுவனங்கள் ஒரு வேளை அவர்களுக்கு தரமான பயிற்சி அளிக்காவிட்டால் அது மேலும் சிக்கலாகிவிடும் என்று கூறும் அவர், பயிற்சி அளிக்க துறையில் மிகுந்த அனுபவம் வாய்ந்த ஒரு வழிகாட்டி தேவை என்றும் அவர்களின் மேலாண்மையில் மாணவர்கள் கல்வி பயில வேண்டும் என்றும் இதற்காக நிறுவனங்களில் நேரடியாக பயிற்றுவிப்பாளர்கள் பணியமர்த்தப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
"நிறுவனங்களும் மாணவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் இருக்கிறதோ அவர்களுக்கு அதே துறையில் பயிற்சி கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.
அதே சமயம் இன்டெர்ன்ஷிப்பிலும் மதிப்பூதியம், வருங்கால வைப்புநிதி மற்றும் மருத்துவ உதவி போன்றவற்றை நிறுவனங்கள் வழங்க வேண்டிய வகையில் தெளிவான வரையறை ஒன்றை அரசே உருவாக்கினால் அது தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஏனெனில், முன்னேறி வரும் தொழில்நுட்ப உலகில் மென்பொருள் துறையில் பணியாற்றுவதற்கு பல்துறை அறிவு தேவைப்படுகிறது. இயந்திரவியல் படித்திருந்தாலும் கணினி அறிவு அவசியமாகிறது, கணினித்துறை படித்திருந்தாலும் மின்னணுவியல் துறை அனுபவம் தேவை. எனவே தற்காலம் முதலே பல்துறை அனுபவம் அவசியமாகிறது
இன்டர்ன்ஷிப் என்பது பலன் கொடுத்தாலும், அது நிறுவனங்களுக்கு செலவினம் ஏற்படுத்த கூடியது. அப்படியே கற்றுக்கொடுக்க நிறுவனங்கள் தயாராக இருந்தாலும் மாணவர்கள் ஆர்வமாக கற்றுக்கொள்வதில்லை என்பது நிறுவனங்களின் கருத்தாக உள்ளது. ஏனெனில், மாணவர்கள் இன்டெர்ன்ஷிப்பை பொதுவாக ஒரு தேர்வாகத்தான் கருதுகிறார்களே தவிர, இது தங்களுக்கு பணிவாய்ப்பில் பயனளிக்கக்கூடியது என்று அவர்கள் கருதுவதில்லை.
அதே சமயம் நிறுவனங்கள் வழங்கக்கூடிய ஊக்கத்தொகை சிறியதாக இருந்தாலும் மாணவர்கள் அதை ஏற்றுக்கொள்ளாத சம்பவங்களும் நடப்பதுண்டு. தொகை சிறியதாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு நாம் கற்றுக்கொள்ளவேண்டியது அவசியம் என்ற கோணத்தில் மாணவர்கள் சிந்திக்கவேண்டும் காலத்தின் கட்டாயம்" என்று அவர் கூறுகிறார்.
மாணவர்கள் பணிக்கு சேரும்போது அவர்கள் கேட்கும் சம்பளம் மிக அதிகமாக இருக்கின்றது என்று பல நிறுவனங்கள் கூறுவதையும் சமீபகாலமாக பரவலாக கேட்க முடிகிறது.
மாணவர்கள் பணிக்கு சேரும்போது அவர்கள் கேட்கும் சம்பளம் மிக அதிகமாக இருக்கின்றது என்று பல நிறுவனங்கள் கூறுவதையும் சமீபகாலமாக பரவலாக கேட்க முடிகிறது
இதுகுறித்து பேசிய அவர், "பணிக்கு வரும்போது மிகவும் திறமையுள்ள நபர்கள் நிச்சயமாக அதிகமாக எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இதில் பிரச்னை என்னவென்றால் பணிக்கேற்ற முழு தகுதியை கொண்டிராதவர்களும் அதிகமான சம்பளத்தையே எதிர்பார்க்கிறார்கள். இன்னொரு விடயம் என்னவென்றால் பெரிய நிறுவனங்கள் குறைந்த பட்ச சம்பளம் என்ற ஒன்றை நிர்ணியிக்கிறார்கள். திடீரென அவர்களுக்கு தேவை ஏற்பட்டால் குறைந்தபட்ச சம்பளத்தை ஏற்றிவிடுகிறார்கள். இதனால் சிறு நிறுவனங்கள் பெரு நிறுவனங்கள் கொடுக்கும் சம்பளத்தை கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள். பெரிய நிறுவனங்களுக்கு இணையாக சிறு நிறுவனங்களும் அதிக சம்பளம் கொடுக்க இயலாது. அதே சமயம் துறைசார் அனுபவம் இல்லாதவர்களை பணியில் அமர்த்துவதை சிறு நிறுவனங்களும் விரும்புவதில்லை. பணியாளர்கள் அனுபவம் பெற்றதும் வேறொரு நிறுவனத்திற்கு மாறிவிடுவது அதற்கு காரணமாக சொல்லபடுகிறது.
இதுபோன்ற பிரச்னைகளின் காரணமாக, பல நிறுவனங்களும் அனுபவம் இல்லாதவர்களை பயிற்சி அளித்து வேலைக்கு எடுத்துக்கொள்வதை நிறுத்தி வருகின்றன. எனவே மாணவர்கள் வேறு ஏதாவது பயிற்சி நிறுவனத்திற்கு போய் பணம் கொடுத்து பயிற்சி எடுக்கவேண்டிய நிலையும் இருக்கிறது. இதுவே ஓராண்டு இன்டெர்ன்ஷிப் என்பது நடைமுறைக்கு வந்தால் இந்த சம்பளம் ஒரே சமமாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அப்போது எல்லா தரப்பினரும் பயன் பெறலாம்" என்று அவர் யோசனை கூறுகிறார்.
கல்வித்தரத்தில் சிக்கல் இருக்கிறா? அதை சரிசெய்வது எப்படி?
இந்திய கல்வி முறையில் நிச்சயம் சிக்கல் இருக்கிறது. கல்லூரியில் இதை தீர்க்க இயலாது. ஆனால் பள்ளி அளவிலேயே மாணவர்கள் எல்லா துறைக்கும் தேவையான அடிப்படையை கற்றுக்கொள்ள வேண்டும். எழுதுதல் படித்துப் புரிந்துகொள்ளுதல், பேசுதல், பேசுதலை புரிந்துகொள்ளுதல், கணிதம் மற்றும் தர்க்க சிந்தனைகளை 9-12ம் வகுப்பிலயே சொல்லித்தர வேண்டும் என்பதே துறைசார் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.
"இதை பள்ளிப்படிப்பிலேயே சொல்லிக்கொடுத்துவிட்டால் கல்லூரியில் படிக்கும்போது அது எளிதாகிவிடும். இதன் மூலம் பள்ளிப்படிப்பில் நாம் கவனம் செலுத்தவேண்டியதன் அவசியம் தெரியவருகிறது. பள்ளிக்கல்வியில் தரம் உயர்த்தினால் ஒட்டுமொத்த கல்வித்தரம் இன்னமும் மேம்படும்" என்று தொழில்முனைவோரான ஏ.ஜே.பாலசுப்பிரமணியன் கூறுகிறார்.
கொரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்படாத நபர்களோ அல்லது தொழில்களோ இருக்க முடியாது. ஆனால், இந்த காலகட்டத்தில் முக்கியத்துவமும் தேவையும் அதிகரித்த ஒருசில துறைகளில் தகவல் தொழில்நுட்பத்துறையும் ஒன்று.
இதுதொடர்பாக சென்னையை சேர்த்த மென்பொருள் ஆலோசகரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கௌரவ மேலாண்மை இயக்குநருமான தி.ந.ச.வெங்கடரங்கன் கூறியதாவது:
"கொரோனா காலத்தில் இரண்டு வருடமாக பல தொழில்கள் முடங்கிவிட்டன. ஆகையால் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது பல்வேறு துறைகளிலும் புதிய வாய்ப்புகள் குறைவாக இருந்தன. இப்போது கொரோனாவின் தாக்கம் குறைந்துவிட்டதால் எல்லா நிறுவனங்களும் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கிவிட்டன. ஆகையால், நிறைய வேலை வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. அதே சூழ்நிலையில் கொரோனா காலக்கட்டத்தை நிறுவனங்கள் தங்களை மீண்டும் மறு பரிசோதனை செய்துகொள்ளும் ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டன. எல்லா பெரு நிறுவனங்களும் புதிய நுட்பங்களில், முக்கியமாக எண்ணிமத் தொழில்நுட்பங்களில், எந்திரவழிக் கற்றலில் முதலீடு செய்தார்கள். இதோடு பல புத்தொழில்களும் ஆரம்பிக்கப்பட்டன. அவற்றுக்கு வானளவு முதலீடுகளும் வந்து குவிந்தன. அதனால் மென்பொருள் உருவாக்கம் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு அதிகரித்தது."
இதனால் மென்பொருள் வல்லுநர்களின் தேவை அதிகரித்த வண்ணம் உள்ளது. மறுபுறம் திறமையான பணியாளர்களை அவர்கள் அதிக சம்பளம் கேட்டாலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரிதும் யோசிக்காமல் அவர்களை வேலைக்கு எடுத்து வருவதால் அது சிறிய நிறுவனங்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருவதை பார்க்க முடிகிறது.
திறமையானவர்கள் சம்பளம் அதிகம் கேட்கிறார்கள், இன்னொரு பக்கம் கல்வித்தரம் குறைவாக இருப்பதால் பல்லாயிரம் பொறியாளர்கள் படித்து வந்தாலும், அவர்களில் பலர் நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட முடியாத அளவுக்கு இருக்கிறார்கள் என்பதையும் அதற்கான தீர்வையும் இந்த கட்டுரையின் தொடக்கத்திலேயே பார்த்துவிட்டோம்.
"மென்பொருள் வேலை என்றாலே பொறியாளர்களால் மட்டும் தான் முடியும் என்று நினைக்கிறீர்களா? அப்படியென்றால் அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்."
"மென்பொருள் வேலை என்றாலே பொறியாளர்களால் மட்டும் தான் முடியும் என்று நினைக்கிறீர்களா? அப்படியென்றால் அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்."
அப்படியென்றால் இந்த பிரச்னைக்கு உடனடி தீர்வே இல்லையா என்று கேட்கிறீர்களா? ஆம், இருக்கிறது என்கிறார் வெங்கடரங்கன்.
"மென்பொருள் வேலை என்றாலே பொறியாளர்களால் மட்டும் தான் முடியும் என்று நினைக்கிறீர்களா? அப்படியென்றால் அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். எந்த செயற்கை நுண்ணறிவு நுட்பங்களை உருவாக்க மென்பொருள் வல்லுநர்கள் அதிகமாக தேவைப்படுகிறார்களோ, அதே தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் மென்பொருள் உருவாக்கம் என்பது, கடந்த சில ஆண்டுகளாக சுலபமாகி வருகிறது. இதில் இந்தியாவில் இருக்கும் சில புத்தொழில்களும் கூடப் பல முன்னேற்றங்களை செய்துக் கொண்டு வருகிறார்கள். இன்றைக்கே மென்பொருள் நிரல்களை (கணினி நிரல்) பொறியாளர்களால் எழுதப்படமாலே, செயலிகளை நாம் எவ்வளவு எளிதாகப் பயன்படுத்துகிறோமோ அதுப் போலவே சுலபமாக மென்பொருளை உருவாக்க முடியும். இந்த நுட்பங்கள் அதிவேகமாக வளர்ச்சியடைந்துக் கொண்டேயிருக்கிறது.
இதனால் அடுத்த 10 ஆண்டுகளில், என் கணிப்பின்படி, அதிகமான மென்பொருட்கள் நிரல்களை எழுதாமலே உருவாக்கப்படும். மீதமுள்ள, மிகவும் சிக்கலான, கடினமான மென்பொருட்கள் மட்டும் தான் மனிதர்களால் நிரல்கள் பக்கம் பக்கமாக எழுதி உருவாக்கப்படும்.
இந்த சூழ்நிலைக்கு நம் உள்ளூர் நிறுவனங்கள் இப்போதே தயாராகி, நிரல் இல்லா மென்பொருள் உருவாக்கத் (No Code, Low Code) தொழில்நுட்பகளில் முதலீடு செய்து, அதில் அவர்களின் பணியாளர்களை பயிற்றுவிக்க முடியும். இதன் மூலம் கணிப்பொறியி்யல் மட்டுமின்றி பட்டயப்படிப்பு, கலை அறிவியலில் கல்லூரிப்படிப்பு முடித்தவர்கள் கூட திறம்பட மென் பொருட்களை உருவாக்க முடியும். சுருங்க சொன்னால் புதியதை கற்றுக்கொள்ளும் மனப்பான்மை மட்டுமே போதும். எல்லோரும் பொறியாளர்களாய் இருக்க வேண்டியதில்லை. எல்லோருக்கும் பொறியியல் பாடங்கள் புரியாது, பிடிக்காது. கொஞ்சம் புத்திசாலித்தனம், கொஞ்சம் ஆர்வம் இருந்தாலே எவராலும் மென்பொருட்களை உருவாக்க முடியும்.
பொறியாளர் இல்லாத மென்பொருள் துறை
இந்த புதிய (பொறியாளர் அல்லாத) மென்பொருள் வல்லுநர்களை உருவாக்கும் திட்டத்தினை அரசே முன்னெடுத்து சென்றால் அருமையாக இருக்கும். இது சாத்தியம் என்று மாணவர்களுக்கு, தமிழ்நாட்டு புத்தொழில்களுக்கு அரசு எடுத்துக்காட்டலாம். இதில் சில ஆரம்ப சிக்கல்கள் வரும், அதை நம் முயற்சியாலும், திட்டமிட்ட செயல்பாடுகளாலும் நாள்தோறும் வளர்ச்சியடைந்து வரும் தொழில்நுட்பத்தாலும் எளிதில் கடந்துவிடலாம். இது தான் வருங்காலம் என்பதை புரிந்துகொள்ள வேண்டிய தருணம் இது.
கணித சூத்திரங்கள் இல்லாமல், நிரல்கள் இல்லாமல் மென்பொருட்களை எப்படி உருவாக்கலாம் (No Code, Low Code) என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும்
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,
கணித சூத்திரங்கள் இல்லாமல், நிரல்கள் இல்லாமல் மென்பொருட்களை எப்படி உருவாக்கலாம் (No Code, Low Code) என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும்
கடந்த முப்பது ஆண்டுகளில் கணினித் துறையில் பொறியாளர்கள் மட்டும் தான் வேலை செய்ய முடியும், அதனால் அதிகளவு கணிப்பொறியாளர்களை உருவாக்க வேண்டும் என்பதைக் கடந்து, எல்லோரும் அவரவர் துறையைக் கற்பதோடு, கணித சூத்திரங்கள் இல்லாமல், நிரல்கள் இல்லாமல் மென்பொருட்களை எப்படி உருவாக்கலாம் (No Code, Low Code) என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய கூட்டுமுயற்சி
மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப, தொலைநோக்கோடு சிந்தித்து அரசாங்கம், தொழில்துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை ஒன்றிணைந்து காலத்துக்கு ஏற்றார்ப்போல் பாடத்திட்டத்தை, நிறுவனங்களின் செயல்பாட்டை மாற்றியமைக்க வேண்டிய நேரமிது" என்று அவர் கூறுகிறார்.
இப்போதுள்ள சூழ்நிலையில் நிறுவனங்களும், அரசாங்கமும், கல்வி நிறுவனங்களும் ஒரு முறையான கொள்கை ஒன்றை வகுத்து ஒன்றாக செயல்பட்டால் நிச்சயம் அனைவருக்கும் வேலை என்பதும் ஒரு தரமான கல்விச் சமூகமும் உருவாகும். குறிப்பாக மாணவர்கள் தம்மை எப்போதும் புதிய விடயங்களை தேடி கற்றுக்கொள்ளவேண்டியதும் அவசியமாகிறது.
(கணினித் தமிழ் ஆர்வலரான கட்டுரையாளர் செல்வமுரளி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மென்பொருள் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். தமிழ்நாடு அரசின் 'முதலமைச்சர் கணினித் தமிழ் விருதை' வென்ற இவர் இணையத் தமிழ் தொடர்பாக பேசியும் எழுதியும் வருகிறார்.)