மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான நிதி உறவுகளை விரிவான ஆய்வுக்கு உட்படுத்த நேரம் கனிந்துள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் மூன்று நாட்கள் 'சிந்தன் ஷிவிர்' மாநாட்டில் விவாதங்களை நடத்துவதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நியமித்த பொருளாதாரம் குறித்த குழுவின் தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப சிதம்பரம் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை பேசினார். அப்போது அவர் நாட்டின் பொருளாதார நிலைமை, இலங்கை பிரச்னை உள்ளிட்டவை தொடர்பாக விரிவாக பேசினார். அதில் இருந்து முக்கிய 10 தகவல்ளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
1. இந்தியாவின் பொருளாதார நிலை "தீவிர கவலைக்குரிய இடத்தில் உள்ளது. உலகளாவிய மற்றும் உள்நாட்டு முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, பொருளாதாரக் கொள்கைகளை மறுசீரமைப்பது குறித்து சிந்திக்க வேண்டியது அவசியம்
2. கடந்த எட்டு ஆண்டுகளில் மெதுவான வளர்ச்சி விகிதத்தில் பொருளாதாரத்தை அழைத்துச் செல்வதே தற்போதைய அரசாங்கத்தின் "அடையாளம்". கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு பொருளாதாரத்தை மீட்கும் முயற்சி "அலட்சியமாகவும் தடங்கலுடனும் உள்ளது".
3. 2017இல் மோதி அரசு கொண்டு வந்த, மோசமான வரைவு மற்றும் நியாயமற்ற முறையில் அமல்படுத்தப்பட்ட சரக்குகள், சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத்தின் விளைவுகளை நாம் அனைவரும் பார்க்க வேண்டும்.
4. மாநிலங்களின் நிதி நிலை முன்னெப்போதும் இல்லாத வகையில் பலவீனமாக உள்ளது. அவற்றை சரிப்படுத்த உடனடி திருத்த நடவடிக்கைகள் தேவை.
5. 1991ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் தாராளமயமாக்கலின் புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்தியது. நாடு செல்வத்தை பெருக்குதல், புதிய தொழில்கள் மற்றும் புதிய தொழில்முனைவோரை உருவாக்குதல், ஒரு பெரிய நடுத்தர வர்க்கத்தை உருவாக்கியது, கோடிக்கணக்கான வேலை வாய்ப்புகள், ஏற்றுமதி அதிகரிப்பு மற்றும் 10 வருட காலத்தில் 27 கோடி பேரை வறுமையில் இருந்து காங்கிரஸ் ஆளுகை மீட்டது.
“கடன் வாங்கி நெய் உண்பது” போல் உள்ளதா மோதி அரசின் பொருளாதார மீட்பு நடவடிக்கைகள்?
என்ன செய்தார் நரேந்திர மோதி? ஏழு படங்களில் ஏழாண்டு கால ஆட்சி
6. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, உலகளாவிய மற்றும் உள்நாட்டு முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, பொருளாதாரக் கொள்கைகளை மீட்டமைப்பது பற்றி சிந்திக்க வேண்டிய அவசியம் இப்போது உணரப்படுகிறது.
7. பொருளாதாரக் கொள்கைகளின் மறுசீரமைப்பு, அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வுகள், மக்கள்தொகையில் அடிமட்ட 10 சதவீதத்தினரிடையே உள்ள தீவிர வறுமை, உலகளாவிய பசி குறியீடு 2021 இல் இந்தியாவின் தரவரிசை (116 நாடுகளில் 101) மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் இடையே பரவலாக ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதற்கான சான்றுகள் போன்ற கேள்விகளுக்கு தீர்வு காண வேண்டும்.
8. இந்தியாவில் வெளியில் நிலவும் சூழ்நிலை பொருளாதாரத்தின் மீதான அழுத்தங்களை அதிகரித்துல்ளது. இந்த முன்னேற்றங்களைக் கையாள்வதற்கான வழிகளின்றி அரசாங்கம் உள்ளது.
9. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி போல இந்தியாவிலும் ஏற்படுமா என செய்தியாளர்கள் கேட்டபோது, "இல்லை. நான் அதை விரும்பவில்லை, நாடாளுமன்றத்திலும் வெளியிலும் குரல்களை நசுக்க மோதி அரசு முயற்சித்தாலும் நம்மிடம் இன்னும் ஜனநாயக நடைமுறை உள்ளது. எனவே இலங்கை நெருக்கடி இந்தியாவிலும் பிரதிபலிக்கும் என நான் கருதவில்லை. ஆனால், ஜனநாயக முறையில் எதிர்கட்சிகள் பேசவும் எதிர்ப்பு தெரிவிக்கவும் அனுமதிக்கப்பட வேண்டும்," என்றார் சிதம்பரம்.
10. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வெள்ளிக்கிழமை தொடங்கி மூன்று நாட்களுக்கு நடைபெறும் சிந்தன் ஷிவிர் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெறுகிறது. இந்த மூன்று நாட்கள் மாநாட்டின் முடிவில் நடைபெறும் காங்கிரஸ் காரிய கமிட்டி (CWC) கூட்டத்தில் வரைவுப் பிரகடனம் வெளியிடப்படும் முன்பாக அது குறித்து விரிவாக விவாதிக்கப்படும்.