இலங்கையில் விசா வழங்குவது நிறுத்தம் என்பது தவறான தகவல் - இந்திய தூதரகம் விளக்கம்
14 May,2022
இலங்கையில் ராஜபக்சே சகோதரர்கள் மேற்கொண்ட தவறான கொள்கை முடிவுகளால் கடுமையான பொருளாதார சீரழிவு ஏற்பட்டுள்ளது. அங்கு அத்தியாவசியப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது. இதனால் பொதுமக்கள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்க இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் உதவிகள் செய்து வருகின்றன.
இதற்கிடையே, இலங்கையின் 26-வது பிரதமராக அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் ரணில் விக்ரமசிங்கே நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
அதன்பின் பேசிய அவர், இலங்கை பொருளாதாரத்தை உயர்த்துவேன், இந்தியா உடனான இலங்கையின் உறவு மேலும் வலுப்படுத்தப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில், இலங்கை அரசு விசா வழங்குவதை நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மறுத்துள்ளது.
இதுகுறித்து, இந்திய தூதரகம் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், விசா வழங்குவது நிறுத்தம் என்ற செய்தி தவறானது. விசா பிரிவில் பணியாற்றும் ஊழியர்களில் பலர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் பணியில் சற்று சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு வேண்டிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என பதிவிட்டுள்ளது.