மனைவியுடன் கட்டாய உறவு வழக்கில் 2 நீதிபதிகள் முரண்பட்ட தீர்ப்பு
12 May,2022
மனைவி சம்மதமின்றி கணவன் மேற்கொள்ளும் கட்டாய உறவை குற்றமாக்க கோரி, ஆஐடி பவுண்டேஷன், இந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்டோர் சார்பில் தாக்கல் செய்த ரிட் மனுக்களை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதிகள் ராஜீவ் ஷக்தர், ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு கடந்த 2011-ம் ஆண்டு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ‘‘தாம்பத்திய வல்லுறவு மேற்கத்திய நாடுகளில் குற்றமாக்கப்பட்டுள்ளது. அதற்காக கண்மூடித்தனமாக இந்தியாவும் பின்பற்ற வேண்டியதில்லை.
மனைவியுடன் கட்டாய உறவை குற்றமாக்குவதற்கு முன், நமது நாட்டிற்கே உரிய எழுத்தறிவு, பெரும்பாலான பெண்களுக்கு இல்லாமல் இருக்கும் நிதி அதிகாரம், சமூக மனப்பான்மை, வேற்றுமைகள், ஏழ்மை ஆகியவற்றை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்’’ என தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த ரிட் மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர்கள் தரப்பு, எதிர் மனுதாரர்கள் தரப்பு வாதங்களை கேட்ட டெல்லி ஐகோர்ட்டு, எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
இந்த நிலையில், டெல்லி ஐகோர்ட்டு நீதிபதிகள் 2 பேரும் முரண்பட்ட தீர்ப்பை கூறியுள்ளனர். நீதிபதி ராஜீவ் ஷக்தர் வழங்கிய தீர்ப்பில், ‘‘தாம்பத்ய வல்லுறவு குற்றமாகாது என விலக்கு அளிக்கும் பிரிவு அரசமைப்பு சட்டத்திற்கு புறம்பானது’’ என்றார்.
நீதிபதி ஹரிசங்கர் முரண்பட்டு, ‘‘தாம்பத்ய வல்லுறவு குற்றமாகாது என விலக்கு அளிக்கும் பிரிவு அரசமைப்புச் சட்டத்திற்கு புறம்பானது இல்லை. புரிந்துகொள்ளத்தக்க வேறுபாட்டின் மூலம் இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது’’ என்று தனது தீர்ப்பில் தெரிவித்தார். மேலும் இந்த முரண்பட்ட தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யவும் மனுதாரர்களுக்கு அனுமதி அளித்தனர்.