பேரறிவாளன் விடுதலை வழக்கு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு
11 May,2022
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையுள்ள பேரறிவாளன் அவரை விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்துவருகிறது. இந்த வழக்கு கடந்தமுறை விசாரணை வந்தபோது, ‘விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவு எடுப்பது குறித்து குடியரசுத் தலைவர் முடிவெடுக்க உள்ளதாக மத்திய அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
மாநில அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது ஆளுநர்தான் முடிவு எடுக்க வேண்டும் என கூறிய நீதிபதிகள் குடியரசுத் தலைவருக்கு அதை அனுப்ப அரசியல் சாசனத்தில் இடம் இல்லை என்றனர். அரசியல் சாசனத்திற்கு எதிராக நடப்பதை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது என்றும், நீதிபதிகளின் வேதபுத்தகமான அரசியல் சாசனத்தை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்தனர். குடியரசுத் தலைவர் முடிவு எடுத்தாலும் அது நீதிமன்றத்தின் முடிவை எந்த விதத்திலும் பாதிக்காது என தெளிவுப்படுத்திய நீதிபதிகள் மத்திய அரசு முடிவெடுக்காவிட்டால் உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கும் என கூறினர்.
இந்தநிலையில் அந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில், ‘தமிழக அரசு தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்கும் முடிவை எடுத்தது. இத்தகவலை மத்திய அரசிடம் பகிர்ந்துகொண்டது. அதற்குப் பிறகு மத்தியஅரசு தனக்கு அதிகாரம் இருப்பதாக கூறி தலையிட்டது. அதன்பிறகுதான் குழப்பங்கள் தொடங்கியது’ என்று வாதிட்டது.
மத்திய அரசு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்திய தண்டனைச் சட்டத்தில் குடியரசுத் தலைவருக்கு தனி அதிகாரம் உள்ளதா? அப்படியெனில் கடந்த 75 ஆண்டுகளில் ஐபிசி குற்றங்களில் ஆளுநரின் மன்னிப்பு அரசியலமைப்புக்கு முரணானதா. குடியரசுத் தலைவருக்கு தமிழக அமைச்சரவையின் முடிவை ஆளுநர் அனுப்பி வைத்த பொழுது என்னென்ன சட்டப்பிரிவுகளின் கீழ் தனக்கதிகாரம் இருக்கிறது என்ற விவரங்களை ஏன் குறிப்பிடாமல் அனுப்பி வைத்துள்ளார்’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதனையடுத்து, தமிழக அரசு, மத்திய அரசு, பேரறிவாளன் தரப்பு வாதங்களைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தனர்.