தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
09 May,2022
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை அசானி புயலாக வலுப்பெற்து. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள அசானி புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிவரும் தீவிர புயல் அசானி கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து தற்போது மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.
தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை ஒடிசா மற்றும் ஆந்திர கடல் பகுதிகளை நெருங்க கூடும். நாளை முதல் 3 நாட்களுக்கு கடலோர ஒடிசா பகுதிகளில் மிக கனமழைக்கும், வட கடலோர ஆந்திர பகுதிகளில் நாளை மாலையும் மிக கனமழைக்கு வாய்ப்பு. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய சேலானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் மற்றும் புதுவை , காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.