இங்கிலாந்தில் வீடு புகுந்து கொள்ளையடித்த இந்தியருக்கு 20 ஆண்டுகள் சிறை
08 May,2022
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசித்து வருபவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜய்பால் சிங் (வயது 28). இவரது நண்பர்கள் கிறிஸ்டோபர் சார்ஜென்ட் (28), ஆன்டனி லாஸ்கெல்லஸ் (34). இவர்கள் 3 பேரும் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் 1-ந்தேதி லண்டனின் கிழக்கு பகுதியில் அப்மின்ஸ்டர் நகரில் உள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்து வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது 11 வயது மகனை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்திவிட்டு 20 ஆயிரம் பவுண்டு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.18 லட்சத்து 99 ஆயிரம்) மதிப்புடைய நகைகள் மற்றும் கைக்கடிகாரங்களை கொள்ளையடித்து சென்றனர்.
இதுதொடர்பான புகாரின் பேரில் நீண்ட புலனாய்வு விசாரணைக்கு பிறகு வீடு புகுந்து கொள்ளையடித்த அஜய்பால் சிங் உள்பட 3 பேரையும் போலீசார் கண்டுபிடித்து, கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு ஸ்னேர்ஸ்புரூக் கிரவுன் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் நடந்த இறுதி விசாரணையில் அஜய்பால் சிங் உள்பட 3 பேர் மீதான குற்றச்சாட்டுகளும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
அதன் பின்னர் அஜய்பால் சிங்குக்கு 20 ஆண்டுகளும், ஆன்டனி லாஸ்கெல்லசுக்கு 18 ஆண்டுகளும், கிறிஸ்டோபர் சார்ஜென்டுக்கு 15 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.