தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கூடத்திலேயே காலைச் சிற்றுண்டி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல் கட்டமாக ஊராட்சி, நகராட்சிப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடமிருந்து இத்திட்டம் தொடங்கப்பட்டு, படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதையொட்டி தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தமது ஆட்சியின் சாதனைகளையும் எதிர்கால திட்டங்களையும் அறிவித்தார் மு.க. ஸ்டாலின் அதன் முக்கிய அம்சங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
புதிய திட்டங்கள்
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கூடத்திலேயே காலைச் சிற்றுண்டி வழங்கப்படும். முதல் கட்டமாக ஊராட்சி, நகராட்சிப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடமிருந்து இத்திட்டம் தொடங்கப்பட்டு, படிப்படியாக விரிவுபடுத்தப்படும். அனைத்து பள்ளி வேலை நாள்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
தமிழ்நாடு முழுவதும் தகைசால் பள்ளிகள் உருவாக்கப்படும். முதல் கட்டமாக 180 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25 மாநகராட்சி மற்றும் அரசு மேல் நிலை பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். கலை, இலக்கியம், இசை போன்றவற்றை கற்பதற்கான கட்டமைப்பு உருவாக்கப்படும்.
நகர்ப்புற மருத்துவமனைகளில் காலை 8 -11 மணி வரையிலும் மாலை 4-8 மணி வரையிலும் நோயாளிகளுக்கு மருத்துவ வசதி வழங்கப்படும். 2030க்குள் அனைவருக்கு நல்வாழ்வு என்பதை தமிழ்நாடு எட்டும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
தமிழ்நாட்டில் தலைமை மருத்துவமனைகளில் நெருக்கடியை குறைக்கும் நோக்கில் நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும். முதற்கட்டமாக சென்னை மாநகராட்சி உட்பட 21 மாநகராட்சிப் பகுதிகளிலும் 63 நகராட்சிப் பகுதிகளிலும் 708 நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.
தமிழ்நாடு முழுவதும் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படும். மருத்துவ வசதி தேவைப்படும் குழந்தைகளுக்கு மருத்துவ வசதியும், ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தும் வழங்கப்படும்.
"உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்" தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும். நீண்டகாலமாக நடைமுறைப்படுத்தப்படாத திட்டங்கள் சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகளின் பேரில் செயல்படுத்தப்படும். இதற்கென ரூ. 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
இந்த ஓராண்டு காலத்தில் செய்யக்கூடியதைவிட அதிகமாக செய்துவிட்டோம் என என்னால் நிச்சயமாக சொல்ல முடியும். இன்னும் வேகமாக செல்ல முடியாத அளவுக்கு தடையாக இருப்பவை நிதி நிலை நெருக்கடியும் மத்திய அரசின் சில நிலைப்பாடுகளும்தான்.
மற்றவர்களின் பலத்தை நம்பி அரசியல் செய்பவனல்ல நான். என்னுடைய பலத்தை நம்பியே அரசியல் செய்கிறேன். எனது பலம் எனது இலக்கில் இருக்கிறது. எனது இலக்கை எப்படியும் அடைவேன். என்னுடைய இலக்கிற்கு திராவிட மாடல் என்று பெயர்.
திமுக ஆட்சியின் திட்டங்கள் சென்று சேராத இடமே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது; இந்த ஓராண்டு மக்களுக்காக உண்மையாக உளமாற உழைத்தேன்.
துளி போன்ற ஓராண்டு காலத்தில், கடல் போன்ற விரிந்த சாதனைகளை செய்துள்ளோம். தமிழக மக்களுக்கு உண்மையாக உழைத்திருக்கிறேன் என்ற மனநிறைவு உள்ளது. திமுக ஆட்சியின் திட்டங்கள் சென்று சேராத மாவட்டங்களே இல்லை என்ற நிலை உள்ளது.
நான் கலைஞர் அல்ல. அவரைப்போல் எனக்கு எழுதத் தெரியாது, பேச தெரியாது, ஆனால் அவரைப்போல் உழைக்க தெரியும்.
ஆட்சிப் பொறுப்பை எனக்கு வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. ஓராண்டு காலம் உண்மையுடன் உழைத்தேன்; என் மீது கலைஞர் மற்றும் பேராசிரியர் அன்பழகன் வைத்த நம்பிக்கையை காப்பாற்றியுள்ளேன்.
ஆட்சிப் பொறுப்பை எனக்கு வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி; எங்கோ ஒரு மூலையிலிருந்து, இங்கு என்னை நிற்க வைக்கும் திமுக தொண்டர்களுக்கு மனமார்ந்த நன்றி.
கொரோனா கால உதவித்தொகையான 4 ஆயிரம் ரூபாயை 2.9 கோடி பேர் பெற்றுள்ளனர். ஆவின் பால் விலையை ரூ.3 குறைத்ததன் மூலம் ஒரு கோடி பேர் பயன் பெற்றுள்ளனர்.
திமுகவின் ஓராண்டு ஆட்சியில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் 68,800 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
பேருந்தில் பயணம் செய்த முதல்வர்
முன்னதாக, தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு புறப்படும் முன்பாக சென்னை கோபாலபுரத்தில் உள்ள தமது தாயார் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்றார் மு.க. ஸ்டாலின். பிறகு அங்கிருந்து தலைமைச் செயலகம் செல்வதற்காக மெரினா கடற்கரை நோக்கி டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாகச் சென்றபோது திடீரென வாகனத்தை நிறுத்துமாறு கூறிய முதலமைச்சர், அந்த வழியாக வந்த ஒரு பேருந்தில் ஏறினார். அதில் இருந்த பயணிகளிடம் பேசிய அவர், அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.
பிறகு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சதுக்கத்தில் இறங்கிய ஸ்டாலின், அங்குள்ள அண்ணாதுரை மற்றும் கருணாநிதியின் நினைவிடங்களுக்கு சென்று மலரஞ்சலி செலுத்தினார். அவர் பேருந்தில் பயணம் செய்த காணொளி மற்றும் படங்களை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமது பேருந்து பயண அனுபவத்தை பகிர்ந்து கொண்ட ஸ்டாலின், "என் வாழ்வில் மறக்க முடியாதது 29சி பேருந்து, அந்த பேருந்தில்தான் பள்ளிக்கு சென்று வந்தேன். 29சி பேருந்தில் இன்று பொதுமக்களுடன் பயணம் செய்து அவர்களுடன் கலந்துரையாடினேன். மகளிருக்கு பேருந்தில் இலவசம் என்ற திட்டம் குறித்து 3 வழித்தடங்களில் 465 பயணிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. மகளிருக்கு பேருந்தில் இலவசம் என்ற திட்டம் மூலம் பெண்களின் மாத வருமானத்தில் 11% மிச்சமாகியுள்ளது. இலவச பயண வசதியை 106.34 கோடி பயணிகள் பெற்று வருகின்றனர். வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு இலவச பயணம் மூலம் மாதந்தோறும் ரூ.5,000 மிச்சமாகியுள்ளது. இதுவே அரசின் உண்மையான சாதனை என்று ஸ்டாலின் கூறினார்.