சென்னை விமான நிலையத்தில், பெரிய ரக பயணியர் விமானங்களை தரையிறக்க வசதியாக, முதலாவது விமான ஓடு பாதையும், சிறிய ரக விமானங்கள் தரையிறக்க வசதியாக, இரண்டாவது விமான ஓடுபாதையும் அமைந்துள்ளன.
இந்நிலையில், இரண்டாவது விமான ஓடுபாதையின், கொளப்பாக்கம் பகுதியில், விமானம் தரையிறங்குவதற்கு ஏதுவாக, அப்பகுதியில் உள்ள தடைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், இரண்டு விமான ஓடுபாதைகளையும், வரும் ஜூன் மாதத்தில், ஒரே நேரத்தில் இயக்க விமான நிலைய நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:
விமான நிலையத்தின் முதல் ஓடுபாதை பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டாவது ஓடு பாதையின் கொளப்பாக்கம் பகுதியில், தடைகள் அதிகம் இருப்பதால், அதை முழுமையாக பயன்படுத்த முடியவில்லை.
இந்நிலையில், இரண்டு விமான ஓடு பாதைகளும் ஒரே சமயத்தில் பயன்படுத்த, நிர்வாகம் ஆலோசனை செய்து வருகிறது. இதன்படி, பிராதன ஓடுபாதையை புறப்பாட்டிற்காகவும், 2வது ஓடு பாதையை தரையிறங்குதல் மற்றும் புறப்பாடு இரண்டிற்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு, அதற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி முடிந்தும், ஜூன் இரண்டாவது வாரத்தில், அவற்றை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.விமான சேவைகள் அதிகரிக்கத் துவங்கி உள்ளது. தற்போது, பிரதான ஓடுபாதையில், ஒரு மணி நேரத்தில், 30க்கும் அதிகமான விமானங்கள் கையாளப்படுகின்றன. இரண்டு விமான ஓடுபாதைகள் ஒரே நேரத்தில் பயன்படுத்தும் போது, 40 க்கும் அதிகமான விமானங்கள், ஒரு மணி நேரத்தில் கையாள முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.