இலங்கை அரசின் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஈழச்சொந்தங்களுக்கும், சிங்கள மக்களுக்குமான துயர்துடைப்புப் பணிகளுக்குப் பொருளுதவிகள் வழங்குங்கள் என உலகத் தமிழ் மக்களிடம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை இனவாத அரசாங்கத்தின் 30 ஆண்டுகால இனவழிப்புப்போர் காரணமாக அந்நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியில் ஈழச்சொந்தங்கள் மட்டுமல்லாது, சிங்கள மக்களும் சிக்குண்டு சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், அங்கிருந்து வரும் செய்திகள் பெருங்கவலை அளிக்கின்றன.
ராஜபக்ச அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள மக்கள் இரண்டு மாதகாலத்திற்கும் மேலாகத் தொடர்ச்சியாகப் போராடி வரும் நிலையில், போராடும் மக்கள் மீது அடக்குமுறையை ஏவிவிட்டும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் அரச வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகிறது கொடுங்கோல் சிங்கள அரசு.
அரைநூற்றாண்டு காலமாக தமிழின மக்கள் அனுபவித்து வந்த கொடுமைகளின் வலியையும், அரசதிகாரத்தின் கொடுங்கோன்மையையும் தற்போது சிங்களப்பொதுமக்களும் மெல்ல மெல்ல உணரத் தொடங்கியுள்ளனர். அதன் வெளிப்பாடே, போராட்டக்களங்களில் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பெயர் சிங்கள மக்களால் உச்சரிக்கப்படுவதும், புலிகளின் ஆட்சியின் கீழ் இருந்திருந்தால் இந்நிலை வந்திருக்காது என வெளிப்படும் அம்மக்களின் எண்ணவோட்டமுமாகும்.
மண்ணையும், மக்களையும் காக்க, இன எதிரிகளோடு ஆயுதமேந்திச் சண்டையிடும் விடுதலைக்கான மறப்போரிலும் அறத்தைக் காத்து, சத்தியத்தின் திருவுருவாய் நின்ற உன்னதத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களது வழியில் வந்த நாம் துன்பப்படும் மக்கள் எவராயினும், எவ்விதப்பாகுபாடும் பாராமல் அவர்களுக்கும் உதவிக்கரம் நீட்டி துயர்போக்க இயன்றதைச் செய்ய வேண்டியது நமது தார்மீகக் கடமையாகும்.
அதுவே தமிழரின் மாண்பு; நமது முன்னோர்கள் வகுத்துத் தந்த உயர்நெறிக்கோட்பாடாகும். இன்றைக்கு தமிழர்களோடு சேர்ந்து சிங்கள மக்களும் இன்னல்களுக்கு ஆளாகி நிற்கும் வேளையில், சிங்கள மக்களின் துன்பத்தில் நாம் ஒருபோதும் மகிழ்வடையவில்லை. அவர்களுக்கும் சேர்த்தே உதவ நினைக்கிறோம்.
ஏனென்றால், தமிழர்கள் ஆகப்பெரும் உயிர்மநேயர்கள்; அறத்தின் பக்கம் நிற்பவர்கள். ஆனால், தமிழர்கள் நாங்கள் துன்பப்பட்டு நிற்கும் வேளையில், சிங்கள இன மக்கள் நியாயத்தின் பக்கம் நிற்காது, எம்மினச்சாவைக் கொண்டாடியதுதான் சகிக்க முடியா வரலாற்றுப்பெருந்துயரம்.
இருந்தபோதிலும், அவர்களுக்கும் இத்தருணத்தில் உதவிக்கரம் நீட்ட எண்ணுகிறோம். இலங்கை அரசின் வாயிலாக இந்திய அரசு செய்யும் உதவிகள் ஒருபோதும் தமிழர்களுக்கும் போய் சேராது. ஆகவே, நாமே நேரடியாகத் துயர்துடைப்பு உதவிகளைச் செய்யத் திட்டமிடுகிறோம். அந்நிலத்தில் வாழும் இரு இனத்தின் மக்களும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆட்பட்டு, பசியிலும், கொடும் வறுமையிலும் வாடி வருகிற தற்போதைய நெருக்கடிமிகு சூழலில், அம்மக்களது துயரத்தைப்போக்கும் முன்னெடுப்பை நாம் தமிழர் கட்சி மேற்கொள்ளவிருக்கிறது.
அதுசமயம், இலங்கை அரசின் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஈழத்துச்சொந்தங்கள் மற்றும் சிங்கள மக்களுக்கு உதவுவதற்காக மாநிலம் முழுமைக்கும் பொருட்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களுக்கு நேரடியாகக் கொண்டுபோய் சேர்க்கப்படவிருக்கிறது.
ஆகவே, அரிசி, பருப்பு, எண்ணெய் வித்துகள், தானியங்கள், உலர் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட துயர்துடைப்புக்கான அத்தியாவசியப்பொருட்களை, சென்னை, வளசரவாக்கத்தில் அமைந்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான இராவணன் குடிலுக்கு அனுப்பியோ, நேரடியாகவோ தந்து மக்களின் துயர்போக்க தங்களது பங்களிப்பைச் செலுத்த வேண்டுமெனக் கோருகிறேன்.