உக்ரைன் போரில் யாருமே வெற்றியாளர்கள் இல்லை; ஜெர்மனியில் பிரதமர் மோடி உரை!
02 May,2022
ஜெர்மனி சென்றுள்ள பிரதமர் மோடி மற்றும் அந்நாட்டு பிரதமர் ஒலிப் ஸ்கோல்ஸ் ஆகிய இருவரும் இணைந்து உரையாற்றினர்.
முன்னதாக, ஜெர்மனி பிரதமர் ஒலிப் ஸ்கோல்சை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இரு நாட்டு உறவை வலுப்படுத்துதல், வர்த்தகம், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து 6-வது இந்திய-ஜெர்மன் அரசுகளுக்கிடையேயான உயர்மட்ட ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து, ஜெர்மனியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
2022-ஆம் ஆண்டு எனது முதல் வெளிநாட்டுப் பயணம் ஜெர்மனியில் நடப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனது நண்பர் பிரதமர் ஒலிப் ஸ்கோல்ஸுடன் தான், வெளிநாட்டுத் தலைவருடனான எனது முதல் தொலைபேசி உரையாடலானது நடந்தது.
ஜனநாயக நாடுகளில், இந்தியாவும் ஜெர்மனியும் பல பொதுவான மதிப்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன.6-வது இந்திய-ஜெர்மன் அரசுகளுக்கிடையேயான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் இந்தியா-ஜெர்மனி கூட்டணிக்கு புதிய திசையை அளித்துள்ளது.இந்திய-ஜெர்மன் அரசுகளுக்கிடையேயான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றிருப்பது, திட்டமிட்டு செயல்படும் நமது உறவுகளுக்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதைக் காட்டுகிறது.
பசுமை ஹைட்ரஜன் பணிக்குழுவை அமைக்க இந்தியாவும் ஜெர்மனியும் முடிவு செய்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில் விரைவான முன்னேற்றத்திற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது
சமீபத்திய புவிசார் அரசியல் சம்பவங்கள் உலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஆபத்தான நிலையில் இருப்பதைக் காட்டுகின்றன. மேலும், அனைத்து நாடுகளும் எவ்வாறு ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன என்பதை இது காட்டுகிறது.
உக்ரைன் நெருக்கடிக்கு பேச்சு வார்த்தைதான் தீர்வு என்று நாங்கள் கூறியிருந்தோம். இந்தப் போரில் வெற்றியாளர் என யாரும் கிடையாது என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் அமைதிக்காக. இருக்கிறோம்.உக்ரைன் போர் பதற்றம் காரணமாக, பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இது வளரும் நாடுகளை பாதிக்கும்.
இவ்வாறு பேசினார். தொடர்ந்து ஜெர்மனி பிரதமர் ஒலிப் ஸ்கோல்ஸ் உரையாற்றினார்.