சென்னையில் போலீஸ் காவலில் விக்னேஷ் என்ற இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ், மத்தியக் குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையை நடத்த வேண்டுமென்றும் சம்பந்தப்பட்ட காவலர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டுமென்றும் மனித உரிமை அமைப்புகள் கோரியுள்ளன. இந்த சம்பவத்தில் காவல்துறை நடந்துகொண்ட விதம் குறித்த பதற வைக்கும் வாக்குமூலங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
ஏப்ரல் 18ஆம் தேதியன்று, சென்னை புரசைவாக்கத்தில் ஆட்டோவில் வந்த விக்னேஷ், சுரேஷ் ஆகிய இருவரும் காவல்துறையால் தாக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதற்குப் பிறகு போலீஸ் காவலில் இருக்கும்போதே விக்னேஷ் மரணமடைந்தார். இந்த நிகழ்வில், விக்னேஷின் குடும்பத்தினர் கடுமையாக மிரட்டப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இதற்குப் பிறகு, ஏப்ரல் 21ஆம் தேதியன்று இந்த விவகாரம் குறித்து சிபிசிஐடி விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த விவகாரத்தில் மிகத் தீவிரமான மனித உரிமை மீறல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில், காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டமைப்பு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து, விக்னேஷின் உறவினர்கள், இந்த நிகழ்வோடு சம்பந்தப்பட்டவர்கள் அளித்த வாக்கு மூலங்களை வெளியிட்டது.
இதில் பல வாக்குமூலங்கள் பதறவைக்கும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. எடுத்துக்காட்டாக, கெல்லீஸ் சிக்னல் அருகே ஆட்டோவை சோதித்த போலீசார் அதில் பயணித்த சுரேஷ் மற்றும் விக்னேஷை அங்கேயே சவுக்கு கட்டையால் அடித்ததாக ஒரு ஆட்டோ டிரைவர் அளித்த வாக்கு மூலம் சொல்கிறது. நடக்க முடியாத அளவுக்கு அடித்த பிறகும் அவருக்கு காவல் நிலையத்தில் சித்ரவதை தொடர்ந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
1 லட்சம் பணத்தைக் கொடுத்து மூடிமறைக்க முயன்றதாக குற்றச்சாட்டு
இந்த அமைப்பு வெளியிட்ட வாக்குமூலத்தில், காவல்துறை இறந்துபோன விக்னேஷை கடுமையாகத் தாக்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அது தவிர, விக்னேஷின் உறவினர்களிடமும் காவல்துறை மோசமாக நடந்துகொண்டதோடு, ஒரு லட்ச ரூபாய் பணத்தைக் கொடுத்து, இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயற்சித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மலைக்குறவர் சமூக விசாரணை கைதி மரணம்: போலீஸ் தாக்கியதால் இறந்ததாக கூறி போராட்டம்
மேற்கத்திய நாடுகள் சாதி பாகுபாடு சவால்களை தற்போது எதிர்கொள்வது ஏன்?
மேலும் இந்த அமைப்பு வெளியிட்ட வாக்குமூலத்தில், விக்னேஷ் தாக்கப்பட்டது குறித்தும் அதற்குப் பிறகு அவரது மரணத்தை மறைப்பதற்காக காவல்துறை மேற்கொண்ட முயற்சிகள் குறித்தும் விரிவான தகவல்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.
கைதுசெய்யப்பட்ட விக்னேஷ், சுரேஷ் ஆகிய இருவரில் விக்னேஷ் இறந்துவிட்ட நிலையில், மீதமுள்ள சுரேஷை அவரது தாயார்கூட போய் சந்திக்க முடியாமல் தடுக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.
மேலும் இந்த அறிக்கையில், பல்வேறு கோரிக்கைகளை காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டமைப்பு முன்வைத்துள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும் என்று கூறப்பட்டாலும் இதுவரை, விசாரணை அதிகாரி நியமிக்கப்படவில்லை. உடனடியாக விசாரணை அதிகாரி யார் என்பதை அறிவிக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கை சிபிசிஐடி பதிவுசெய்யும்போது 302ன் கீழ் மட்டுமல்லாது, பட்டியலினத்தோர் மற்றும் பழங்குடியினர் சித்ரவதை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கைப் பதிவுசெய்ய வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
போலீசாரை கைது செய்யக் கோரிக்கை
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சார்பு ஆய்வாளர், காவலர்கள் ஆகியோரைக் கைதுசெய்வதோடு, அந்தப் பகுதிக்குப் பொறுப்பாக இருந்த ரோந்து ஆய்வாளர், உதவி கமிஷனர் ஆகியோரையும் கைதுசெய்ய வேண்டுமென்றும் கோரப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட விக்னேஷின் குடும்பத்தினர், உயிரோடு உள்ள சுரேஷின் குடும்பத்தினர், சாட்சியான பிரபு உள்ளிட்டோருக்குக் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்றும் இந்தக் குற்ற நிகழ்ந்த காவல் நிலையங்களின் சிசிடிவி கேமரா பதிவுகள் கையகப்படுத்தப்பட வேண்டுமென்றும் கோரப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் வழக்கைப் போல நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிசிஐடி விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கையை குடும்பத்தினருக்கு ஏன் அளிக்கவில்லையென்று விசாரிக்க வேண்டுமென்றும் கோரப்பட்டுள்ளது.
மேலும் விக்னேஷின் குடும்பத்தினர் தெருவோரம் வசிப்பவர்கள் என்பதால், அவர்களுக்கு உரிய அடையாள அட்டைகளை அளித்து, வசிக்க ஒரு வீட்டையும் அளிக்க வேண்டுமென இந்த அமைப்பு கேட்டுக்கொண்டிருக்கிறது.